பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவது நிலவும் நெருக்கடியை அதிகரிக்குமே அன்றி தீர்வாக அமையாது என்பதால், ஜனாதிபதி பதவி விலகும் வரை கோட்டா கோ கம பேராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஆதரவு வழங்க போவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் கிழட்டு மைனாவை விரட்டி விட்டு கிழட்டு கோழியை கொண்டு வரும் முயற்சியின் பின்னால், ஏகாதிபத்திய சூழ்ச்சிகள் இருக்கின்றன.
மார்ச் 20 ஆரம்பித்த கதையின் காட்டி கொடுப்பையே இவர்கள் செய்கின்றனர். ஐந்து முறை பிரதமராக பதவி வகித்து தோல்வியடைந்த தலைவர் ஒருவரை மீண்டும் நியமிப்பது திறந்து பார்த்த பையை மீண்டும் திறந்து பார்ப்பது போன்றது.
ஜனாதிபதி மூழ்கும் போகும் நேரத்தில் ரணில் விக்ரமசிங்க என்ற கொடியை பிடித்து தொங்க பார்க்கின்றார். தற்போது இவர்கள் இருவரும் மூழ்க போவதை காணமுடியும்.
சட்டவிரோதமாக ஒன்றுக்கூடியவர்களை கைது செய்ய வேண்டுமாயின் கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகையில் சட்டவிரோதமாக ஒன்றுக் கூடி ஆரம்பித்தவர்களை கட்டாயம் கைது செய்ய வேண்டும் எனவும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டதன் காரணமாக பதவி விலக முடியாது என்று கூறிய ஜனாதிபதி, கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் அமர்த்துவதற்கு எவ்வாறு முயற்சி செய்கின்றார் எனவும் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக ரணில் விக்கிரமசிங்க தற்போதைய பிரச்சினையை தீர்க்க முடியாது என வலியுறுத்திய ஜாகொட, இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் கோட்ட கோ கம, பின்னர் மைனா கோ கம, இறுதியாக ஹொரு கோ கமவை ஸ்தாபித்தவர்கள் இறுதியில் ரணில் கோ கமவை ஸ்தாபிப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடைக்கால ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கான பிரேரணையை முன்வைத்து, மக்களின் பிரச்சினைகளை தீர்த்து இடைக்கால அரசாங்கம் தேர்தலை நடத்துவது உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மாநாட்டை உருவாக்குவதற்கான பிரேரணையை முன்வைத்ததாக ஜாகொட தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை இராஜினாமா செய்யும்படி கேட்டபோது, அவர் எப்போதும் மக்களால் பதவிக்கு வந்ததாகவும், அதனால் தான் பதவி விலக முடியாது என்றும் கூறினார். இதனைக் கூறிய ஜனாதிபதியே கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் பிரதமராக்குகிறார். இந்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.