ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாவலரே ரணில் விக்கிரமசிங்க – அநுரகுமார

189 0

ரணில் விக்கிரமசிங்க எப்போதும் ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாவராக இருந்து வருகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் குழுவொன்று இன்று (12) பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் நெருக்கடிகளைத் தீர்க்கும் என ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய ராஜபக்ஷவும் நம்பும் தீர்வை நாட்டில் உள்ள எவராலும் நம்பவோ ஏற்றுக்கொள்ளவோமுடியாது.

கோட்டாபயவை ரணில் நம்புவதும், ரணிலை கோட்டாபய நம்புவதும் தான் நடக்கும். அவர்கள் செய்வதை நாட்டின் குடிமக்கள் எவரும் நம்பமாட்டார்கள்”.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களின் ஆணைக்கு செவிசாய்க்காமல் தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

;ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஸக்களின் பாதுகாவலர், அவர் அவர்களின் பாதுகாப்பிற்காக அதிகாரத்தைப் பெறுகிறார்.

அதே சமயம் ராஜபக்ஸக்கள் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாவலர்கள். அதைத்தான் கடந்த இரண்டரை வருடங்களாக நாங்கள் சுட்டிக்காட்டி வருகிறோம்.

மக்களின் கோரிக்கைகளுக்கு யார் செவிசாய்க்கிறார்கள் என்பதில் தான் நெருக்கடிக்கு தீர்வு உள்ளது.

சூழ்ச்சிக்காரர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான தீர்மானங்களே எட்டப்பட்டுள்ளதாகவும் மாளிகைகளில் நடைபெறும் சதிகளின் மூலமாக மக்களின் உண்மையான எதிர்பார்ப்பும் அபிப்பிராயங்களும் நிறைவேற்றப்படவில்லை என அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.