திவுலப்பிட்டிய சம்பவம்; அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை

259 0

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அரச அதிகாரிகள் குறித்து உள்நாட்டலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பாரியளவான மண் அகழ்வு இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் படி அங்கு சென்றிருந்த பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருக்குமிடையில் முரண்பாடான நிலமை தோன்றியிருந்தது.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி கம்பஹா மாவட்ட அரசாங்க அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எந்தவொரு அரச அதிகாரியும் மக்களால் முன்வைக்கப்படும் குறைகள் சம்பந்தமாக செவிவாய்க்க வேண்டும் என்ற 11/2015 சுற்றரிக்கையை திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர் மீறியிருப்பதனாலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கூறியுள்ளது.

தொலைபேசியினூடாக மக்கள் குறைகளை முன்வைத்தால், அதற்கும் அரச அதிகாரிகள் செவிவாய்க்க வேண்டும் என்பதுடன், அரச உயர் அதிகாரிகளுக்கு அரசாங்கத்தினால் தொலைபேசிக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.

இதுதவிர கம்பஹா மாவட்ட செயலாளர் தொடர்பிலும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.