மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவரது கணவர் விஜயன் என்ற எம்.ஜி.ஆர். விஜயன். இவர், கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் காரை வழிமறித்து விஜயனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது.
இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதலில் விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையின்போது, விஜயன் மனைவி சுதாவின் தங்கை பானு, கூலிப்படை மூலம் விஜயனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. கருணா என்ற போலீஸ்காரர் இந்த கூலிப்படையை அமர்த்தி கொலைக்கு உதவி செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பானு, போலீஸ்காரர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், ஆர்.கார்த்தி, தினேஷ், சாலமன், வெங்கடேஷ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. ஏழு ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கு விசாரணையில் 79 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்தயைடுத்து, தீர்ப்பை ஜூலை 13-ந் தேதி (இன்று) பிறப்பிப்பதாக கடந்த 6-ந் தேதி நீதிபதி ஜெயசந்திரன் அறிவித்தார்.
அதன்படி, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) பிறப்பிக்கப்பட்டது. அப்போது, விஜயன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். மேலும், அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.