நம்பிக்கையில்லா பிரேரணைகளை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இணைக்க சபாநாயகர் இணக்கம்

156 0

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை,ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆகியவற்றை பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இணக்கம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில்  பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் விசேட கட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்றது.  கடந்த 6ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை 10 நாள் காலத்திற்குள் பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பாரளுமன்ற கூட்டத்தொடரின் போது சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்.

கடந்த ஒருமாத காலமாக இடம்பெற்ற பாராளுன்ற கூட்டத்தொடரில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் எவ்வித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை என ஆளும் தரப்பின் கட்சி தலைவர்கள் குறிப்பிட்டனர்.

நம்பிக்கையில்லா பிரேரணைகள் மீதான விவாதம் இடம்பெறும் திகதிகள் நாளை தீர்மானிக்கப்படும் என கட்சி தலைவர் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கடந்த வாரம் சபாநாயகரிடம் சமர்ப்பித்தார்கள்

சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டவுடன் பாராளுமன்ற ஒழுங்குப்புத்தகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது.

உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளித்த இரண்டு தனி உறுப்பினர் சட்டமூலங்களையும் மூம்மொழிகளிலும் பாராளுமன்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை திருத்தங்களுடன் 21ஆவது அரசியலமைப்பு திருத்தமாக கொண்டு வருவதற்கு கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு தீர்மானித்தது.அதற்கமைய அது தொடர்பான முன்மொழிகளை வழங்குமாறு சபாநாயகர் கட்சி தலைவர்களிடம் அண்மையில் அறிவித்திருந்தார்.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள வரைபுகளில் உள்ள முன்மொழிவுகளின் அடிப்படையில் அரசாங்கத்தினால் அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதுடன்,அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமூலங்கள் சட்;டமாதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கட்சி தலைவர்களிம் குறிப்பிட்டுள்ளார்.