நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளையும் ஒன்றாக இணைத்த பெருமை சிறுபான்மை கட்சிகளுக்கு உண்டு- எம்.எஸ்.எஸ்.அமீர்அலி(காணொளி)

345 0

நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளையும் ஒன்றாக இணைத்த பெருமை சிறுபான்மை கட்சிகளுக்கு உண்டு என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

இரண்டு பிரதான கட்சிகளும் எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களை ஏமாற்றிவிடக் கூடாது எனவும் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுயகைத்தொழில் மற்றும் வீட்டு தோட்டம் செய்வோருக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட 350 தொழிலாளர்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டம் வறுமை நிலையில் உள்ளதாக கணிக்கப்படும் நிலையில் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கும் வகையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஜதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக பனை அபிவிருத்தி சபையின் மாவட்ட இணைப்பாளர் என்.விஜயன், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், மாவட்ட இணைப்பாளர் ஜோன் லோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் 176 பேருக்கு பனை உற்பத்திகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களும் 174 பேருக்கு வீட்டுதோட்டம் செய்வதற்கான உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.