நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வினை வலியுறுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டமை மனிதாபிமான செயற்பாடல்ல.
இதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மக்கள் பிரதிநிதிகளாக செயற்பட பொறுத்தமற்றவர்கள் என்று நான்கு பிரதான பௌத்த பீடங்கள் தெரிவித்துள்ளன.
மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் , அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், அமரபுர மகா பீடத்தின் மகாநாயக்க தொடம்பஹல ஸ்ரீ சந்திரசிறி தேரர் மற்றும் ராமஞ்ஞ மகா பீடத்தின் மகாநாயக்க மகுலேவி ஸ்ரீ விமலாஹிதான தேரர் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளின் வாழ்க்கை, சொத்துக்கள் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரம் என்பவற்றை பாதுகாக்கும் பொறுப்பு அரசியலமைப்பின் மூலம் அரசியல் தலைவர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் வன்முறையைத் தூண்டி குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பௌத்த பீடங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இவ்வாறான நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு தற்போதாவது உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.