மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பல்வேறு செய்திகள் பரவி வருகின்ற போதிலும், இதுவரை நம்பகமான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு பாராளுமன்றமும் பதவி விலக வேண்டும் என சமூகத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக இது மேலும் தீவிரமடைந்துள்ளதுடன் இதற்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வீதிகளை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் அண்மையில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவி விலகினால் தற்போதைய அமைச்சரவை கலைக்கப்பட்டு சர்வகட்சி ஆட்சி அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.