நாட்டை முழுமையாக சீரழித்துவிட்டு பொறுப்பை எம்மிடம் கையளித்து விட்டு இலகுவாக தப்பித்து விடலாம் என்று எவரும் எண்ண முடியாது.
இவ்வாறான சந்தர்ப்பவாத , சம்பிரதாய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து , அரசியல் மறுசீரமைப்பிற்கு செல்ல வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் தமது தவறுகளை ஏற்றுக் கொண்டனர். உண்மையில் அது வரவேற்கத்தக்கது. எனினும் தற்போது பாவ மன்னிப்பு கேட்பது பிரயோசனமற்றது. மன்னிப்பு வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக மக்களின் பணம் வீண் விரயமாக்கப்பட்டுள்ளது. முழு நாட்டையும் சீர்குலைத்துவிட்டு தற்போது எம்மை பொறுப்பேற்குமாறு கூறுகின்றனர்.
நாட்டை தற்போதுள்ள நிலைமையிலிருந்து கட்டியெழுப்புவதற்குச் செல்லும் பாதை அழகானதல்ல. மிகவும் கடினமானதாகும். எவ்வாறிருப்பினும் அந்த சவாலை ஏற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது. எனினும் அரச தலைவரை மக்கள் ஜனநாயக முறைமையில் தேர்தல் ஊடாகவே தெரிவு செய்ய வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் , சம்பிரதாய அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வெறுமனே பதவிகளிலிருந்து விலகி எம்மிடம் பொறுப்பை கையளித்துவிட்டு இலகுவாக தப்பித்து விட முடியாது. பொருளாதார மறுசீரமைப்பிற்கு முன்னர் அரசியல் மறுசீரமைப்பிற்கு செல்ல வேண்டும்.
நாம் தற்போது மேற்குலக நாடுகளை பகைத்துக் கொண்டிருக்கின்றேர். இந்தியா மற்றும் சீனா என்பன எம்மை சந்தேகத்துடனேயே பார்க்கின்றன. சர்வதேச நாடுகளுடனான உறவை சுமூகமானதாகக் கட்டியெழுப்ப வேண்டும். நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் திறமையுள்ள நிபுணர்கள் உள்ளனர் என்றார்.