நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ; தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விஷேட குழுவுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை வெளிப்படுத்தியதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன.
நாட்டில் நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 13 அம்ச ஆலோசனைக் கோவையை முன் வைத்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ;( 8) அச்சங்கத்தை சந்திக்க ; ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளின் பிரதி நிதிகள் , ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் நேரம் கேட்டிருந்தனர். அதன்படி இன்று அந்த அனைத்து தரப்பினருடனும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.
இதன்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அலுவலகத்தில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளின் பிரதி நிதிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது,
இதில், நிறைவேற்று அதிகார முறையை நீக்க அக்கட்சிகளின் பெரும்பாலானவை இணங்கியுள்ளதுடன் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே இன்று பிற்பகல், ஜனாதிபதியை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்பு குழுவினர் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துள்ளனர். இதன்போது தன்னை சந்தித்த சட்டத்தரணிகள் சங்க குழுவினரிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் தற்போது நாட்டில் நிலவும் அவசரகால சட்டம் தொடர்பிலும் ஜனாதிபதியை கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அச்சட்டம் 10 நாட்களில் தானாக நீங்கும் என பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து இன்று மாலை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.