அவசரகால சட்டம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை சிரேஷ்ட சட்டத்தரணி கிறிஸ்மால் வர்ணசூரிய

403 0

மக்களின் அமைதியான போராட்டத்தை அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி கட்டுப்படுத்த முடியாது. அதனால் அவசரகால சட்டம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

அத்துடன் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தினாலும் அதன் விதிமுறைகள் இன்னும் வர்த்தமானி படுத்தப்படவில்லை என சிரேஷ்ட சட்டத்தரணி கிறிஸ்மால் வர்ணசூரிய தெரிவித்தார்.

இலங்கை மனிதநேய கட்சி ஞாயிற்றுக்கிழமை (8) ;கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அதன் பிரகாரம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான தனது விருப்பத்தை ஜனாதிபதி தற்போது தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டால், எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என விதிமுறைகளை தெரிவித்து, அவர்த்தமானி அறிவிப்பு செய்யப்படவேண்டும்.

அவ்வாறான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. அதனால் தற்போது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அவசரகால சட்டத்தைக்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது.

அத்துடன் அவசரகால சட்டம் என்பது எமது நாட்டு சட்டத்தின் கீழே இருக்கின்றது. அமைதியான முறையில், சொத்துகளுக்கு சேதத்தை ஏற்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் போராட்டங்களை இந்த சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது. அவ்வாறு ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்பவர்களை அச்சுறுத்தவே தற்போது அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தி இருக்கின்றது. இது மக்களை அடக்குவதற்கு அரசாங்கம் கையில் எடுத்திருக்கும் இறுதித் துரும்பாகும்.

மேலும் நாட்டின் தற்போதை அரசியல் நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகாண இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாக பலரும் கதைத்து வருகின்றனர். இடைக்கால அரசாங்கம் என்று எதுவும் அரசியலமைப்பில் இல்லை. மாறாக தேசிய அரசாங்கம் அமைக்க முடியும். பாராளுமன்றத்தில் இருக்கும் பல கட்சிகள் இணைந்து, தற்போதைய பிரச்சினைக்கு தீர்வுகாண குறிப்பிட்ட காலத்துக்கு தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு அரசியலமைப்பில் இடமிருக்கின்றது.

அத்துடன் காலிமுகத்திடலில் போராட்டத்தில் இருப்பவர்கள், ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகவேண்டும் என தெரிவிக்கின்றனர். அரசியலமைப்பின் 49/ 1இன் கீழ் பிரதமர் பதவி விலகினால் அரசாங்கம் பதவி விலகும். அதேபோல் நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றின் மூலம் அரசாங்கத்தை பதவி விலக்க முடியும்.

ஆனால் ஜனாதிபதியை அவ்வாறு பதவி விலக்க முடியாது. அரசியலமைப்பில் அதற்கான விதிமுறைகள் மிகவும் கடினமாகும். அதனால் மக்களின் போராட்டத்தை பயன்டுத்தி தற்போது இருக்கும் முறைமையை மாற்றியமைத்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும். குறிப்பாக ஜனாதிபதி முற்றாக பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.