மக்கள் உணர்ச்சிகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது“

235 0

அவசரகால நிலையைப் பயன்படுத்தி, மக்களை ஒடுக்குவதே பிரதமரின் பதவி விலகல் நாடகத்துக்குள் இருப்பதாக தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத், ஆனால் “மக்கள் அதற்க பயப்படமாட்டார்கள். ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதே மக்கள் வீதிக்கு இறங்கினர். எனவே மக்கள் உணர்ச்சிகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது“ என்று தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முழு நாடும் ஒரே குரலில் பிரதமரும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என்றும் இவர்கள் பதவி விலகினால் மாத்திரமே நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும் தெரிவிக்கின்றார்கள். தற்போது பிரதமர் பதவி விலகப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. அது மாத்திரம் போதாது. எல்லோரும் கூறுவதைப் போல் கோட்டவும் வீட்டுக்குப் போக வேண்டும்“ என்று தெரிவித்தார்.

“அவ்வாறு பிரதமர் பதவி விலகி, புதிய அரசாங்கம் உருவானாலும் அமைச்சரவையின் பிரதானியாக ஜனாதிபதியே இருப்பார். எனவே புதிய அமைச்சர்களையும் பிரதமரையும் ஜனாதிபதியே நியமிப்பார்“ எனவும் சுட்டிக்காட்டினார்.

“எனவே மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்திய, விவசாயிகளுக்கு உரத்தை இல்லாமல் செய்த கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அமைச்சரவை உருவாக்கினால் நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இதனால் மேலும் நெருக்கடி அதிகரிக்குமே தவிர குறைவடையாது“ என்று தெரிவித்தார்.

“ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கமே பதவி விலகவேண்டும். அப்படியானால் மாத்திரமே சகல கட்சிகளும் ஒன்று கூடி இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும்.
தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய வேண்டுமாயின் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கமே பதவி விலகவேண்டும். இல்லையேல் இந்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்“ என்றார்.