ரயில்வே பாதுகாப்பு படை சென்னையை சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர் குழுக்களுடன் இணைந்து, சென்னையின் புறநகர் ரயில் நிலையங்களில் பயணிக்கும் பெண்களிடம் ரயில் நிலையங்களிலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கருத்தைப் பெற முடிவு செய்துள்ளது.
சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொல்லப்பட்டதை தொடர்ந்து அதிகம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ரயில்வே துறையின் தகவலின் படி, லயோலா கல்லூரி, ஏ.எம் ஜெயின் கல்லூரி, இந்து கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் அடங்கிய குழுக்கள் சென்னையின் புறநகர் ரயில்களில் பயணிக்கும் பெண்களிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்தும், ரயில் நிலையங்களில் பாதுகாப்பான சூழலை எப்படி ஏற்படுத்துவதும் குறித்தும் உரையாற்றி கருத்தைப் பெற ஆலோசனை தரப்பட்டுள்ளது. மேலும் தன்னார்வலர்கள் ரயில் நிலையங்களிலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ”ரயில் நிலையங்களிலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெண்களிடம் பெறப்படும் கருத்துகள் மூலம் குறைகளை சரி செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் மேம்படுத்த முடியும்” என்றார்.
பல்வேறு தனியார் நிறுவனங்களும் சமூக நோக்கம் கருதி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று (செவ்வாய்) ரயில்வே பாதுகாப்பு படை காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தை சந்தித்தது. இச்சந்திப்பின் இறுதியில் சிசிடிவி கேமராவை பொத்தேரி ரயில் நிலையத்தில் பொருத்த நிதி வழங்குவதாக அப்பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ”சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை கண்காணிப்பு கேமிராக்கள் (சிசிடிவி) பொருத்துவது குறித்து டென்டர் ஏற்கெனவே விடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இவ்வருட டிசம்பர் மாதம் முடிவடையும். தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு புற நகர் ரயில் நிலையத்திலிருக்கும் இரண்டு நடைபாதைகளுக்கும் 16 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த 50 லட்சம் தேவைப்படுகிறது” என்றார்.