இலங்கையில் தற்போது சிங்கள அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டமானது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகத்தான் எனது பார்வையில் உள்ளது என கனடாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பாற்றர்சன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது அரச தலைவர்களுக்கும் அரசுக்கும் எதிராக மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தை நீங்கள் எவ்வாறு பாக்கின்றீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
“நீண்ட காலமாக உலக நாடுகளை திட்டமிட்ட ரீதியில் மிகவும் சாமர்த்தியமாக ஏமாற்றிக் கொண்டிருந்த சிங்கள அரசின் முகத்திரை கிழிந்து கொண்டிருக்கின்றது.
அது மட்டுமல்ல தமிழ் மக்களை பயங்கரவாத முத்திரையுடன் பார்த்து வந்த சிங்கள மக்களும் தமிழ் மக்களுக்கு சார்பான பதாதைகளை தங்கள் கரங்களில் ஏந்திக்கொண்டு போராடுவது வரவேற்க தக்கது. குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளை அவர்கள் நினைவு கூறுவதும் நீதி கேட்பதும் சிறப்பானதே. மக்கள் புரட்சி வெடித்துள்ளது. மக்கள் சக்தி ஒரு மகத்தான சக்தியாகும்.
நாம் இங்கு இன்னுமொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். சிங்கள மக்களின் போராட்டமானது தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தில் இருந்து வேறுபடுகிறது. அவர்கள் தமது நாடு அதல பாதாளத்தில் தள்ளப்பட்டதை பொறுக்க முடியாமலும், அன்றாட தேவைகளுக்காக, உணவுக்காக அவர்கள் போராட்டம் ஆரம்பித்திருந்தாலும், தமிழருக்காவும் பதாதைகளை ஏந்துவது என்பது சர்வதேச ரீதியாக பார்க்கும் பொழுது தமிழரின் போராட்டத்திட்கு வலு சேர்ப்பித்ததாகவே பார்க்க வேண்டும்.
தமிழரின் கல்வி , மொழி உரிமைகள் மறுக்கப்பட்டதாலேயே தமிழர்கள் அஹிம்சை வழியில் தோற்ற பின்னர் ஆயுத வழியை தேர்ந்தெடுத்தார்கள், அதுவும் அரசுக்கு எதிரான அடக்குமுறையில் இருந்து விடுதலை பெற்று தமிழர்கள் சுய நிர்ணய உரிமையோடு வாழவே தவிர , சிங்கள அரசு சிங்களவரிடையே பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்தது போல சிங்களவரின் நாட்டை கைப்பற்ற அல்ல என்கிற உண்மையை எந்தெந்த வழிகளில் புரிய வைக்க முடியுமோ அந்தந்த வழிகளை நாம் கையாள தவற கூடாது.
தமிழர்கள் எவ்வாறு இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தலாம் ?
அங்கு போராட்டத்தில் கூடியிருக்கும் இளைஞர்கள் மத்தியில் எமது போராட்டத்தின் நியாயபாடுகளை வெளிக்கொணரும் வகையில் அமைந்திருக்கும் ஆவணப்படங்களை காட்சிபடுத்தி அப்பாவி தமிழ் மக்கள் எவ்வாறு திட்டமிட்ட ரீதியில் அநியாயமாக கொல்லப்பட்டார்கள் என்கின்ற உண்மையுடன் பல தசாப்தங்களுக்கு மேலாக பொருளாதார தடையை அறிமுகபடுத்தி தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எடுத்து சொல்ல வேண்டும்.
அவர்களோடு தமிழரும் இணைந்து இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் அந்த இடத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை கூறி ஆர்ப்பாட்டத்தை வலுப்படுத்தினால் எமது போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக அதை கருத முடியும்.
முடிந்தால் போராட்டத்திற்கு தமிழரின் பங்களிப்பை வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓவொருவரிடமும் கையெழுத்தை பெற்று, போர் குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும் என்னும் அழுத்தத்தை சர்வதேச சமூகங்களுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை உறுப்பு நாடுகளுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் அனுப்பி வைத்தால் மிகப் பெரிய மாற்றத்திற்கு வழி வகுக்கலாம்.
துண்டு பிரசாரங்கள் மூலமாக கூட ஒரு விழிப்புணர்வை ஏட்படுத்த முடியும். “அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நிரந்தர நண்பர்களும் இல்லை“ என்பதை தெளிவாக புரிந்து கொண்டு இராஜ தந்திர முறையில் காய்களை நகர்த்த வேண்டும். எப்போதும் “நம்ப நட, நம்பி நடவாதே“ என்கிற பழமொழி நினைவில் இருப்பது நல்லது” என்றார்.