யாழ். பிராந்திய கடற்படை தளபதியின் அணுகுமுறையால் அதிருப்தியில் இந்தியத்துணைத் தூதுவர்

252 0

யாழ். பிராந்திய கடற்படைத் தளபதியின் அணுகுமுறையால் தான் அதிருப்தி அடைந்துள்ளதாக யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட 3 தீவுகளிற்குச் செல்வதற்காகக் கடற்படையினரிடம் விண்ணப்பித்துள்ளனர்.

அதற்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுவருமாறு யாழ். பிராந்திய கடற்படைத் தளபதி அறிவித்துள்ளார்.

இதன்பின்பு பாதுகாப்பு அமைச்சிற்கு விண்ணப்பித்து அங்கிருந்து கிடைத்த அனுமதியைக் கடற்படையினரிடம் சமர்ப்பித்தே யாழில் உள்ள இந்தியத் தூதுவர் 3 தீவிகளிற்கும் பயணித்துள்ளார்.

இது தொடர்பில் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் தமது அத்திருப்பியினையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சிற்குத் தெரிவித்ததோடு, சாதாரண சுற்றுலாப் பயணிகளே சென்றுவரும் இடத்திற்கு எம்மிடம் பாதுகாப்பு அமைச்சு அனுமதி கோரியிருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இந்தியத் துணைத் தூதுவர் தெரிவித்த அதிருப்தி தொடர்பில் பதிலளித்துள்ள கடற்படையினர் சாதாரண சுற்றுலாப் பயணிகள் சாதாரண பயணிகள் படகில் சென்று வருகின்றனர்.

இருந்தபோதும் இந்திய அதிகாரிகள் இலங்கை கடற்படையினரின் படகில் சென்று வருவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்படுகின்றது எனப் பதிலளித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.