அவசரகால நிலைமைகளை பிரகடனப்படுத்துவதன் மூலமாக ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொதுமக்களின் போராட்டங்களில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்படுகின்றதா என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி. பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமாக இருக்கும் ராஜபக்ஷ அரசாங்கத்தினை வீட்டுக்குச் செல்லுமாறு பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றார்கள்.
அவர்கள் தமக்குள்ள அடிப்படை உரிமைகளின் பிரகாரம் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள். அந்த மக்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்திற்காகவே போராட்டத்தினை மேற்கொள்வதோடு முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள்.
ஜனநாயக அடிப்படையில் அவர்கள் தமது வெளிப்பாடுகளைச் செய்கின்றார்கள். எங்கும் அவர்கள் வன்முறைகளை பின்பற்றவில்லை. அவ்வாறான நிலையில் தற்போது, அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
<p>ஒரு மாதகாலத்திற்கும் அதிகமாக மக்கள் போராட்டங்களை கருத்திற்கொள்ளாத ஆட்சியாளர்கள் தற்போது அவசரகால நிலைமையை பிறப்பித்துள்ளார்கள். ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலைமையானது பத்து நாட்கள் வரையில் அமுல் படுத்தப்பட முடியும். தொடர்ந்து அமுலாக்குவதாக இருந்தால் பாராளுமன்றத்தின் அனுமதி அவசியமாகின்றது.
எனினும், எதிர்வரும் பத்து நாட்களுக்குள் அமைதியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இந்தச் சட்டத்தினை பயன்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் இல்லாமில்லை
குறிப்பாக, போராட்டங்களின் போது வன்முறைகளை தோற்றுவிப்பதற்கும் இச்சட்டம் காரணியாக அமையும் ஆபத்துக்களும் உள்ளன. ஆகவே, குறித்த சட்டமானது உடனடியாக மீளப்பெற்று மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு இடமளிக்க வேண்டும் என்றார்.