இடைக்கால அரசாங்கம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் சாதகமான தீர்மானத்தை எதிர்வரும் வாரத்திற்குள் முன்னெடுக்காவிடின் சுயாதீன குழுக்களின் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வாரம் பதவி நீக்கப்படலாம் அல்லது அவர் பதவி விலகலாம் என அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
<p>அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இடைக்கால அரசாங்கத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது.
பொதுஜன பெரமுனவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளது.
சர்வ கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் நாளை அல்லது நாளை மறுதினம் பிரதான எதிர்க்கட்சிகளுடன் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
சாதகமான பதில் கிடைக்காவிடின் அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 39 பேரையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்படும்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமரின் பதவி விலகல்,இடைக்கால அரசாங்கம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரம் பிரதமர் பதவி விலக்கப்படலாம் அல்லது அவர் பதவி விலக நேரிடலாம்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைகிறது. ஜனாதிபதி,பிரதமர் பாதுகாப்பாகவே உள்ளார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீதிக்கிறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து விரைவாக பொதுத்தேர்தலை நடத்துவது அவசியமாகும் என்றார்