கடுவலை நீதிவான் சானிமா விஜேபண்டாரவின் பாதுகாப்பு திடீரென நீக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 5 ஆம் திகதியும் ; 6 ஆம் திகதியும் பாராளுமன்றை அண்மித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்குமாறு தலங்கமை பொலிஸார் கடுவலை நீதிவானிடம் கோரியிருந்த நிலையில், அவர் அக்கோரிக்கையை நிராகரித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே அவரது வீட்டின் பாதுகாப்பு திடீரென அகற்றப்பட்டதாக அறிய முடிகிறது.
<p>இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவிடம் கேசரி வாரவெளியீடு வினவிய போது, அவ்வாறு பாதுகாப்பு அகற்றப்படவில்லை எனவும், ; தவறான புரிந்துணர்வு பாதுகாப்பு அகற்றப்பட்டதாக தகவல் பரவக் காரணம் எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கடுவலை நீதிவான் சானிமா விஜேபண்டாரவின் உத்தியோக பூர்வ இல்ல வளாகத்தை தலங்கம பொலிஸ் பொறுப்பதிகாரி வியாழக்கிழமை (5) தனிப்பட்ட ரீதியில் சோதனை செய்த பின்னர் வீட்டின் பாதுகாப்பினை அகற்றியுள்ளதாக, நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை கொண்ட ; நீதிச் சேவை சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஊடாக அறிவித்து, தலங்கமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை கோரியுள்ளது
குறித்த சங்கத்தின் தலைவரான நுகேகொடை நீதிவான் பிரசன்ன அல்விஸ், செயலாளரான பூகொடை மேலதிக மாவட்ட நீதிபதி பசன் ; அமரசேன ஆகியோரின் கையெழுத்துடன் இந்த முறைப்பாடு அனுப்பட்டுள்ளது.
நீதிவான்களின் பாதுகாப்பு அவ்வந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் அதற்கு பொலிஸ் மா அதிபரின் சுற்று நிருபம் ஒன்று உள்ளதாகவும், அந்த சுற்று நிருபத்தை மீறி தலங்கம பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து இனி மேல் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதை தடுக்குமாறும் நீதிச் சேவை சங்கம் கோரியுள்ளது.<
இவ்வாறான நடவடிக்கைகள், நீதிமன்றின் சுயாதீனமான நடவடிக்கைகள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் செயற்பாடுகள் என சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம், ; உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக ஏற்பட முடியுமான பாரிய அனர்த்தத்தை தடுக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.