கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதி லெஸ்போஸ் தீவில் ஏஜியன் கடலில் அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு கவிழ்ந்ததில் ஒரு குழந்தை இறந்தது. 6 பேர் காணாமல் போயினர்.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளின் தீவுகளில் கரையேறும் அவர்கள் அங்கிருந்து ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளுக்கு நடைபயணமாக செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) அகதிகளை ஏற்றிகொண்டுவந்த படகு ஒன்று கீரிஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஒரு குழந்தை பலியானது. ஆறு பேர் காணாமல் போயினர்.
இதுகுறித்து கடலோர காவல்படை அதிகாரி கூறும்போது, ”கவிழ்ந்த படகில் பயணித்த பெண்ணின் உடல் ஒன்று மீட்கப்பட்டது. இதுவரை நான்கு அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
கிரேக்கக் கடலோரம் படகுகள் மூலமும், ஐரோப்பிய எல்லை அமைப்பான ஃப்ரெண்டெக்ஸ் மூலமும் காணமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன்படி சட்டவிரோதமாக கிரீஸ் தீவுகளுக்கு வரும் அகதிகள் துருக்கிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கிரீஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கும் அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.