நாட்டில் கடந்த இரு வாரங்களுக்கும் அதிகமாக வீட்டு பாவனைக்கான சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் நாளாந்தம் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்த மக்கள் இன்றையதினம் நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். குறித்த போராட்டம் தற்போதும் இடம்பெற்று வருகின்றது.
அதற்கமைய கொழும்பு – 14 , ஆமர்வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் இன்று காலை முதல் அப்பகுதியூடான சகல போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதமடைந்தன.
ஆமர் வீதியூடாக கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை, புறக்கோட்டை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வீதிகள் முழுமையாக மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வீதிகளில் எரிவாயு சிலிண்டர்களை வைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டமையால் அங்கு அமைதியற்ற நிலைமையும் ஏற்பட்டது.
பின்னர் ஆமர்வீதி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து எரிவாயுவைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.
இதே போன்று பெலவத்த சந்தியில் எரிவாயுவிற்காக காத்திருந்த மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் பத்தரமுல்ல – கொட்டாவ மற்றும் கொட்டாவ – பொரளை ஆகிய வீதிகளுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் மகாபாகே பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு – நீர்கொழும்கு வீதியூடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன.