வாழ்வதற்கான போராட்டமும்! ஆள்வதற்கான போராட்டமும்!

342 0
சாம, பேத, தான, தண்டம் என்ற நால்வகை உத்திகளைக் கைக்கொள்ளும் கோதபாய தரப்பு, படிப்படியாக நான்காம் வகைக்குள் கால் பதிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து வரும் நாட்களும் வாரங்களும் அனைத்தையும் நின்று வெளிப்படுத்தலாம். நாளாந்த வாழ்வுக்காக மக்கள் போராடுகிறார்கள். ஆட்சியாளர்கள் ஆள்பவர்களாக தொடர்வதற்கு போராடுகிறார்கள். வெல்லப் போவது யார்? 

இலங்கை ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவுக்கு எதிராகவும், அவரது தலைமையிலான ஆட்சிக்கு எதிராகவும் தொடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் விசை குறையாமலும், திசை மாறாமலும் தொடருகிறது.
இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. முதலாவது, எந்தவொரு அரசியல் கட்சியும் இதற்குத் தலைமை தாங்கவில்லை என்பது மட்டுமன்றி, அரசியல்வாதிகளை போராட்டக் களம் பக்கம் கால் வைக்கவும் அனுமதிக்கவில்லை.
இரண்டாவது, முழுக்க முழுக்க இளம்சமூகத்தினரால் இது முன்னெடுக்கப்படுவது. இப்போது மாணவர்கள் – முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய களங்களைத் திறந்து போராட்டத்தை வியாபிக்கின்றனர்.
கோட்டே ஜெயவர்த்தனபுரவிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு நடத்தப்படும் போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர்களே தனித்து நடத்துகின்றனர். இதனால் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு உட்செல்ல வேண்டிய உறுப்பினர்கள் படையினரின் பாதுகாப்புடன் பின்வழியால் செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
மாணவர் முன்னெடுப்பைக் கலைக்க கண்ணீர் புகைவீச்சு, ஒரு டசினுக்கும் அதிகமான மாணவர்கள் கைதாகி பிணையில் விடுதலை என்பவை தொடர் சம்பவங்களாகியுள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் இன்னொரு முழுநாள் கர்த்தாலை ஆறாம் திகதி நடத்தியுள்ளன. அடுத்த வாரத்தில் இதனைத் தொடர்ச்சியாக நடத்த ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
வடிவம் மாறாது, புதியவர்களை உள்வாங்கும் வகையில் ஒரு மாதத்தைத் தாண்டியும் தொடரும் தன்னெழுச்சிப் போராட்டத்துக்கு இற்றைவரை அரசியலாளர்களுக்கு கதவடைப்பு என்பது இலங்கையின் வரலாற்றில் முக்கிய பதிவுக்குரியது.
வாழ்வுக்கான மக்கள் போராட்டம் வீதிகளிலும் முச்சந்திகளிலும் சந்தைகளிலும் பிரதான அரச அலுவலகங்கள் முன்னாலும் இடம்பெற்றுக் கொண்டிருக்க, அரசியல்வாதிகள் தங்கள் இருப்புக்கான போராட்டத்தை மறுபுறத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
கோதா கோ ஹோம், மகிந்த கோ ஹோம் என்ற கோசங்களுக்கு இதுநாள்வரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை. கேட்கப்படாத அமைச்சரவை மாற்றமொன்று கண்துடைப்பு நாடகமாக இடம்பெற்றது.
தம்மீது வீசப்பட்ட எறிகுண்டை லாவகமாக தமது அண்ணன் மகிந்த மீது தள்ளிவிட்டு, அவரை மெதுவாக வீட்டுக்கு அனுப்பிவிட்டால் பிரச்சனையை தீர்த்து விடலாமென கோதபாய தீட்டிய திட்டம் குரங்கு வாலாகியுள்ளது.
இலங்கையின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பவர்களும், அரசியல் தலைமைகளை மாற்றி ஏற்றி இறக்குபவர்களும், அரசியலமைப்பை வரையறை செய்பவர்களுமாக இயங்கும் பௌத்த பீட மகாநாயக்கர்கள் ஒன்று சேர்ந்து விடுத்த பரபரப்பான அரசியல் பிரகடனமும் செல்லாக்காசாகி விட்டது.
மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும், சகல அரசியல் கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதுவே மகாநாயக்கர்களின் மகாசங்க பிரகடனமாக அறிவிக்கப்பட்டது. இதனை மீறுபவர்களை தாங்கள் அங்கீகரிக்கப் போவதில்லையென்ற வெருட்டலும் இவர்களின் பிரகடனத்தில் கூறப்பட்டது.
ஆயிரம் பௌத்த பிக்குகள் கொழும்பு வீதிகளில் ஊர்வலமாகச் சென்று, சுதந்திர சதுக்கத்தில் கூடி, மகாசங்க பிரகடனத்தை ஒவ்வொரு வரியாக வாசித்து ஒரு வாரமாகியும் எதுவுமே நடைபெறவில்லை. அதேசமயம், மகாசங்கப் பிரகடனத்தை எவரும் எதிர்க்கவுமில்லை. சொல்லப்போனால் இரண்டும் கெட்டான் நிலைதான்.
இப்போதைய அரசாட்சி என்பது அரசியல் கொள்கை சார்ந்தது எனக் கூறமுடியாது. ஒரு கட்சியின் பெயரிலான – ஒரு குடும்பத்தின் ஆட்சி. நேர்த்தியாகச் சொன்னால் அண்ணன் – தம்பியின் (சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகள் உட்பட) இறுக்கமான அன்புப் பிணைப்பைக் கொண்ட ஆட்சி இது.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த ஒரு தசாப்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோதபாய. கொடிய யுத்தமொன்றை பத்தாண்டுகள் நடத்தி அதில் ருசி கண்டவர். இலங்கையில் இனஅழிப்பு என்பதை யதார்த்தமாக்கியவர். இதற்கான வெகுமதியாகவே ஜனாதிபதி பதவி இவருக்கு வழங்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் இவரை வேட்பாளராக்கி, வெற்றியைப் பெற்றுக் கொடுத்துஇ குடும்பத்துக்கான தலைமைக் கதிரையை நிலைபெறச் செய்தவர் மகிந்த. இதனையடுத்து இடம்பெற்ற பொதுத்தேர்தலின்போது முக்கியமான ஒரு முடிவு எடுக்கப்பட்டதாம். அந்த பரம ரகசியத்தை சில நாட்களுக்கு முன்னரே பசில் ராஜபக்ச பகிரங்கப்படுத்தினார்.
பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால் பிரதமர் பதவி மகிந்தவுக்கு. வேறு எவருக்கும் அந்தப் பதவி வழங்கப்படாது. கட்சியில் வேறு எவரும் அந்தப் பதவியை கேட்கவும் முடியாது. இந்த உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு மகிந்த அயராது உழைத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்து – அதற்கான பரிசாக பிரதமர் பதவியையும் எடுத்துக் கொண்டார் என்பது பசிலின் வாக்குமூலம்.
மகாசங்கத்தின் பிரகடனத்தை ஏற்று பிரதமர் பதவியிலிருந்து மகிந்த விலகினால் அல்லது தவிர்க்க முடியாத சூழலில் விலக்கப்பட்டால், பொதுஜன பெரமுனவிலிருந்து வேறு எவரும் பிரதமர் பதவியை பெற முடியாது, பெறவும் மாட்டார்களென்று தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்ட உத்தரவாதத்தை பசில் இப்போது ஞாபகப்படுத்தியுள்ளார்.
மகிந்தவை பதவி விலகுமாறு எவரும் கேட்கக்கூடாது என்பதை நேரடியாக மகாசங்கத்தினருக்குச் சொல்லாமல்இ இதுதான் தங்களின் நிலையான நிலைப்பாடு என்பதை தெரிவிக்கவே பசில் ராஜபக்ச இவ்வேளையில் அதனை வெளிப்படுத்தினார் என்பது ஒரு வகை அரசியல் சாணக்கியம்.
இதன் தொடராக கோதபாய தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். தமது அண்ணனை பிரதமர் பதவியிலிருந்து தாம் ஒருபோதும் நீக்கப்போவதில்லை என்ற அவரது அறிவித்தல், இரத்தம் நீரிலும் தடிப்பானது என்ற பழமொழியை ஞாபகப்படுத்துவது.
மறுதரப்பில், மகிந்த எப்போதும் ஒரே கருத்தை மீள மீள ஒப்புவித்து வருகிறார். தம்மைப் பதவி விலகக் கோருபவர்கள் அதற்கான பெரும்பான்மையை நாடாளுமன்ற வாக்குப் பலத்தினூடாக நிரூபித்தால் அதனைத் தாம் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று சொல்கின்ற அதேசமயம், அப்படியாக நிலைமை மாறுமானால் அடுத்த எதிர்கட்சித் தலைவராக தாமே இருப்பாரென்ற தகவலையும் நாசூக்காக வெளியிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசவின் பதவிக்கு ஆப்பு வைக்கப்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதே இதன் உள்நோக்கம்.
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போன்று மே மாதம் 5ம் திகதி பலப்பரீட்சை ஒன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. சபையின் உபசபாநாயகர் தெரிவு இது.
இதுவரை இப்பதவியில் இருந்தவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான கேகாலை மாவட்ட எம்.பி. ரஞ்சித் சியம்பலபிட்டிய. சுதந்திரக் கட்சி அரச கூட்டிலிருந்து வெளியேறியதை அடுத்து இவர் தமது உபசபாநாயகர் பதவியைத் துறந்தார். இதனால் புதியவர் ஒருவரைத் தெரிவதற்கான நிகழ்வு 5ம் திகதி இடம்பெற்றது.
எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு அரச எதிர்ப்பு கட்சிகளின் சார்பில் சியம்பலபிட்டியவையே மீண்டும் உபசபாநாயகர் பதவிக்கு சுதந்திரக் கட்சி பிரேரித்தது. இதற்கு சஜித்தின் பிரதான எதிர்க்கட்சி ஆதரவைத் தெரிவித்திருந்தது. மகிந்த தலைமையிலான ஆளும் தரப்பில் ஒருவரை போட்டிக்கு இறக்கி வெற்றி பெற முடியாது போனால் என்ற கேள்வி எழுந்த காரணத்தால் சியம்பலப்பிட்டியவையே ஆளும் தரப்பு ஆதரிக்கத் தீர்மானித்தது.
இப்படியொரு சூழ்நிலை உருவாகுமென்பதை எதிர்பார்த்திருந்த சஜித் அணி, தங்களின் முன்னைய முடிவை மாற்றி – தங்கள் தரப்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கரை போட்டிக்கு நிறுத்தியது. இதிலுள்ள விசித்திரம் என்னவென்றால் இரண்டு வேட்பாளர்களும் எதிரணியைச் சார்ந்தவர்கள்.
மகிந்த தரப்பு தங்கள் ஆதரவை சியம்பலபிட்டியவுக்கு வழங்கி 148 வாக்குகள் ஊடாக அவரை தெரிவு செய்ய வழிவகுத்தது. இது மிக மோசமான ஓர் அரசியல் சூழ்ச்சி. இம்தியாசுக்கு 65 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனை ஒரு மினி நம்பிக்கையில்லாத் தீர்மானமாக மகிந்த தரப்பு பார்த்ததால் தங்கள் தரப்பிலிருந்து ஒருவரை போட்டிக்கு இறக்காமல், எதிரணியினரை பிளவுபடுத்தியது.
ஏற்கனவே சஜித் தலைமையிலான எதிர்க்கட்சி தங்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எழுத்து மூலம் சபாநாயகரிடம் கையளித்துள்ள நிலையில், உபசபாநாயகர் தெரிவில் தாங்கள் போட்டியிட்டுத் தோல்வியடைந்தால் என்ற அச்சத்தினாலேயே மகிந்த தரப்பு உபசபாநாயகர் போட்டியிலிருந்து தவிர்த்துக் கொண்டது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
இவ்வாறான அரசியல் சூறாவளி எதிர்கொள்ளப்படும் இவ்வேளையில் கதிரை மாற்றத்துக்கோ, ஆட்சி மாற்றத்துக்கோ சாத்தியம் காணப்படவில்லை. மாறாக, போராட்டத்தின் வீரியத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பதிலேயே கோதா தரப்பு ஈடுபட்டுள்ளது.
சாம, பேத, தான, தண்டம் என்ற நால்வகை உத்திகளைக் கைக்கொள்ளும் கோதா தரப்புஇ படிப்படியாக நான்காம் வகைக்குள் கால் பதிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து வரும் நாட்களும் வாரங்களும் அனைத்தையும் நின்று வெளிப்படுத்தலாம்.
வறுமைக்கோட்டின் கீழ் நாளாந்த வாழ்வுக்கு மக்கள் போராடுகிறார்கள். ஆனால், ஆட்சிக் கதிரையில் இருப்பவர்கள் அதிலிருந்து அகலாது தொடர்ந்து ஆள்பவர்களாக இருப்பதற்கு போராடுகிறார்கள். வெல்லப் போவது யார்?
பனங்காட்டான்