நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசரகால நிலைமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் ஜனாதிபதியின் செயலாளர் , பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை நாளைமறுதினம் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் அவசரகால நிலைமை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது
பொலிஸாரால் இலகுவாகக் கட்டுப்படுத்தப்படக் கூடியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் எதற்காக அவசரகால நிலைமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
‘பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம், கைது மற்றும் தடுப்புக் காவலுடன் தொடர்புடைய உரிமைகள் மற்றும் பிற அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் அவசரகால நிலைமை சட்டத்தின் போது பாதிக்கப்படாது என நம்புகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.