வந்தாரை வாழவைத்த பூமியில் !அகரப்பாவலன்.

309 0

காலைக்கதிரவன் எழுவான் !
புள்ளினங்கள் பாட்டிசைக்கும் !
வயல் வெளியின் மீதில்
தென்றல் மோதும் ..
வன்னித்தாய் பச்சை சேலையில்
பசுமையாய் வீற்றிருப்பாள் ..

ஆம் !

பசுமை கொழித்த பூமியல்லவா !
சோற்றுக்கா பஞ்சம் ..
பாலாறும் தேனாறும் ஓடுகின்ற
பூமியல்லவா !

அன்று !
முள்ளிவாய்க்காலில்
குண்டுகளின் தீ மட்டும்
தமிழரை எரிக்கவில்லை !
பசித்தீயும் எரித்தது ..

சிங்கள அரசு ஏற்கனவே
உணவுத்தடை போட்டிருந்தது ..
அதுமட்டுமா ?
நெற்களஞ்சிய கூடாரங்களில்
குண்டுகளையும் போட்டது ..
வயல்வெளிகளில் பசுமை
செங்காடாய் மாறியது ..
வன்னிக்காகங்கள்
பிணம் தின்ற நேரம் ..

மனத்தென்பும்,உடற்தென்பும் அற்ற
முதியோரும்,குழந்தைகளும்
பசியால் துடித்த நேரம் ..
உணவுப்பொதி போட
யாரும் வரவில்லை ..

கடலில் பிடிக்கப்பட்ட
கழிவு மீன்கள்
சேகரிக்கப்பட்ட தானியங்கள்
கஞ்சியாய் பரிமாறப்பட்டது ..
எத்தனை வேளை
அது சாத்தியமானது ..

பசியால் துடித்து இறந்தவரின்
எண்ணிக்கை .. – கொடுமையை
ரசித்துக் கொண்டாடியவர்களின்
பட்டியலில் இல்லை ..
அவர்கள் பிணக்கணக்கை
எண்ணிக்கொண்டிருந்தார்கள் ..

வந்தாரை வாழவைத்த வன்னிமண்ணில்
வற்றிய வயிற்றுடன் தமிழர்கள் ..
ஒருபருக்கை சோறும் இல்லா நிலை ..
மறப்போமா இதை ?
மன்னிப்போமா இதை ?

காலச் சக்கரம் சுழல்கிறது – அது
சிங்களத்தில் தெரிகிறது ..
-அகரப்பாவலன்-