எங்கே ? எங்கே ?
காணாமல் போனவர்கள் எங்கே ?
சுற்றி வளைத்து
பல்குழல் சுடுகலன் கொண்டு
சுட்டுத்தள்ளிய நேரம் ..
விண்ணில் பறந்து
கடன்வாங்கிய குண்டுகளை
அள்ளிவீசிய நேரம் ..
மக்களே ! மக்களே !
பாதுகாப்பு வலையத்துள் வாருங்கள் !
என்று சொல்லி
குண்டுகளை ஏவிய நேரம் ..
உலகச் சட்டவிரோத
பொஸ்பரஸ் குண்டுகளை
மமதையில் வீசிய நேரம் ..
கடலலை சுனாமியாய்
விரட்டிய போது கூட
இப்படி இடிந்து போய்விடவில்லை ..
இது ..
நெருப்பாற்றில் சிக்கி
நீந்தத் தவித்த நேரம் ..
ஆம் ..சிங்களத்தின்
சதிவலைப் பொறிக்குள்
மக்கள் சிக்கிய நேரம் ..
சரணடைந்தவரை
கேள்வி வேலால்
துளைத்தெடுத்தனர் – பின்
தரம்பிரித்தனர் ..
அங்கும் தரப்படுத்தலை
அவர்கள் விடவில்லை .. – அது
தகமையை அழிக்கும்
தரப்படுத்தல் ..
தாய் அழ ..
பிள்ளைகள் கதற ..
மனைவி குமுற ..
சகோதரம் விம்ம ..
இழுத்துச் சென்றனர் ..
இந்தச் சணப்பொழுதுவரை
காணவில்லை !
பதிலில்லை !
சாவடிக்கப்பட்டனரா ?
சிறையடைக்கப்பட்டனரா ?
பதிலில்லாமல் கேள்விகளே
மிஞ்சுகிறது ..
நியாயம் பெறுவதற்கு – இவர்கள்
நீதிமான்களில்லை ..
இரக்கப்படுவதற்கு – இவர்கள்
புத்தர் இல்லை ..
இவர்கள் ..
பரிசுத்தமான
சுயநலவாதிகள் ..
இவர்களின் தகமையே
கொடுங்கோலின் உச்சம் ..
முடிவுதான் என்ன ?
முடிந்த முடிவின் பாதையே .
-அகரப்பாவலன்-