பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எம்மால் பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரின் பின்னால் ஒழிந்து கொண்டு , அரசாங்கம் அதற்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை மறைத்துள்ளது.
இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சி தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை (5) கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது பிரதி சபாநாயகர் விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சை குறித்து தெளிவுபடுத்தும் போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமக்கு பெரும்பான்மை இல்லை என்பதை பிரதி சபாநாயகர் விவகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் மறைத்துள்ளது. இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி இவ்வாறு செயற்படுவது பொறுத்தமற்றது.
அதே போன்று அரசாங்கம் இவ்வாறான சூழ்ச்சிகள் ஊடாக தமக்கு பலம் இருப்பதாக காண்பிக்க முயற்சித்தாலும் , மக்களை அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு அரசாங்கம் கலைக்கப்பட்டால் அதன் பின்னர் நாட்டை நிர்வகிப்பதற்கான வேலைத்திட்டம் என்ன என்பதை ஐக்கிய மக்கள் முன்வைக்க வேண்டும்
எனவே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எமது ஆதரவு வேண்டுமெனில் ஒன்றி சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும். அவ்வாறில்லை எனில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அதன் பின்னர் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பேற்க வேண்டும்.
இந்த இரு தெரிவுகளில் எதனை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதைக் கேட்டு சஜித் பிரேமதாசவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். அதற்கு அவர் துரித பதிலை வழங்க வேண்டும் என்றார்.