பலப்படுத்தப்பட்டது ஜனாதிபதி கோட்டாபயவின் பாதுகாப்பு!

117 0

ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் ஜனாதிபதி பாதுகாப்பு படைக்கு உதவியாக பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்லவின் கீழ் ஜனாதிபதியின் பாதுகாப்புப் படைகள் வினைத்திறனாகச் செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கிக்கு அருகாமையில் உள்ள பொலிஸ் பாதுகாப்பு வளையத்தை உடைத்து ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய போராட்டகாரர்கள் மேற்கொண்ட முயற்சி உள்ளிட்ட பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் ஜனாதிபதியின் பாதுகாப்புப் படையின் பொலிஸ் குழுக்களின் கட்டளை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கட்டளையின் கீழ் இருந்தது.

போராட்டங்களின் போது பொலிஸாருக்கு உத்தரவு வழங்குவதில் ஏற்படும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மேற்பார்வையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதி பாதுகாப்பு படை பொலிஸ் குழுவிற்கு பொறுப்பாக புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவுத்துறை மற்றும் கண்காணிப்புக்குப் பொறுப்பான எஸ்.எஸ்.பி டி. ஜயலத் உள்ளிட்ட 100 பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் அடங்கிய குழுவொன்று நேற்று (5ம் திகதி) முதல் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை (3ம் திகதி) ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் பிக்குகளை பொலிஸாரால் தடுக்க முடியாமல் போனமை தொடர்பிலான கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் (4ம் திகதி) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் ஏனைய பாதுகாப்புத் தலைவர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.