சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் தங்கியுள்ள வீடற்றோர் மற்றும் ஆதரவற்றோர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றோர் மற்றும் ஆதரவற்ற முதியோர், சிறுவர்கள், மனநலம் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தங்குவதற்காக 54 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த காப்பகங்களில் தற்போதைய நிலவரப்படி 1,741 பேர் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் கோயம்பேடு புறநகர் பஸ் நிலைய வளாகத்தில் வீடற்றோர் மற்றும் ஆதரவற்றோர் இரவு நேரங்களில் அதிக அளவில் தங்கி வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இது தொடர்பாக மாநகராட்சி, பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் போலீசார் இணைந்து கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோரை மீட்க சிறப்பு மீட்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து கடந்த 3ந் தேதி இரவு முழுவதும் கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் தங்கியிருந்த வீடற்ற மற்றும் ஆதரவற்றோர் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்தனர். இதில் 27 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் என 43 பேர் மீட்கப்பட்டு மாநகராட்சி காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுஇடங்கள் மற்றும் சாலையோரங்களில் தங்கியுள்ள வீடற்றோர் மற்றும் ஆதரவற்றோர்கள் குறித்த தகவல்களை 9445190472 மற்றும் 04425303849 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து உள்ளார்.
கோயம்பேடு பஸ் நிலைய பிளாட்பாரங்கள் மற்றும் வளாகத்தில் தினந்தோறும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளியூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் ஆவார்கள். அவர்கள் இரவு நேரத்தில் பஸ் நிலையத்தில் தங்கி விட்டு பகலில் வேலைக்கு சென்று வருகிறார்கள்.
அவர்களுடன் ஆதரவற்றோரும் தங்கி கலந்து இருப்பதால் அதிகாரிகளுக்கு விசாரிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளன. இதனால் ஆதரவற்றோரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் தேவையின்றி தங்குபவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.