நூல் விலை உயர்வால் பாதிப்பு – பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்ல பின்னலாடை துறையினர் முடிவு

122 0

உள்நாட்டு தேவைக்கு போக மீதம் நூலை மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கவேண்டும்.

கடந்த 2-ந் தேதி நூல் விலை கிலோவுக்கு ரூ. 40 உயர்த்தப்பட்டது. திருப்பூர் பின்னலாடை துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்த கோரி வருகிற 16-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அனைத்து பின்னலாடை சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்தது. ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமை வகித்தார்.
அப்போது திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர், ‘ஜாப் ஒர்க்’ சங்க பிரதிநிதிகள் இணைந்து, எம்.பி., சுப்பராயன் மற்றும் இப்பகுதி அரசியல் பிரமுகர்களை நேரில் சந்தித்து, பஞ்சு,நூல் விலை உயர்வால் பின்னலாடை துறை பாதிப்புகள் குறித்து விளக்க வேண்டும்.
மேலும் உள்நாட்டு தேவைக்கு போக மீதம் நூலை மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கவேண்டும். யூக வணிகத்திலிருந்து விலக்கி அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் பருத்தியை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கவனத்துக்கு கொண்டு செல்ல அரசியல் பிரமுகர்களை வலியுறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சைமா பொது செயலாளர் பொன்னுசாமி, ‘நிட்மா’ தலைவர் ரத்தினசாமி, ‘டீமா’ தலைவர் முத்துரத்தினம் உட்பட பல்வேறு சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாய ஆலை உரிமையாளர் சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
இது குறித்து அதன் தலைவர் காந்திராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விலை ஏற்றத்தால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தித்துறை மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுவருகிறது. பஞ்சு இறக்குமதி வரியை நீக்கினால் நூல் விலை ஓரளவாவது குறையும் என்று எதிர்பார்த்து இருந்த சூழலில், அதற்கு மாறாக நூல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
எனவே பஞ்சு விலை உயர்வுக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான நூல் விலை உயர்வு ஒட்டு மொத்த ஜவுளித்துறையையும் பாதிப்புள்ளாக்கி வருகிறது.
இதனால் இத்துறை சார்ந்த அனைத்து ஜாப் ஒர்க் நிறுவனங்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. எனவே உள்நாட்டு தேவைக்கான பஞ்சு போக மீதம் உள்ள பஞ்சை மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
பஞ்சு பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சு உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளை ஊக்குவிக்க நல்ல திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.