லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன், ரஷியா போரை நாங்கள் ஆதரிக்கவில்லை – பெலாரஸ் அதிபர் விளக்கம்

159 0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 70 நாட்களைத் தாண்டியுள்ளது. இந்தப் போரில் ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

6.5.2022
06.45: உக்ரைனில் உடனடியாக வன்முறையை நிறுத்தி, பேச்சு வாயிலாக தீர்வு காணும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ரஷ்யா போரால் உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள உயிர் பலிக்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் கண்டனம் தெரிவித்தன. அத்துடன், போரின் தாக்கத்தால் உணவுப் பொருட்களுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டை தவிர்க்க இந்தியாவும், பிரான்சும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
04.15: உக்ரைன் ராணுவம் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கெர்சான், மைகோலேவ் ஆகியவற்றில் சில பகுதிகளை ரஷிய படைகளிடம் இருந்து மீட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் குண்டு வீச்சை தொடர்ந்தன. நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள் மற்றும் விநியோக இலக்குகளையும் குறிவைத்து தாக்கின. ஆனாலும் டான்பாசின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் ரஷியாவின் 11 தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது.
00.35: உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக  பெலாரஸ் அரசும் செயல்பட்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், ரஷிய, உக்ரைன் போரை தான் ஆதரிக்கவில்லை என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
எவ்வித போரையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரைன்- ரஷியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படுமென நம்புகிறேன் என தெரிவித்தார்.