அது 2017 ஜனவரி 23ம் அல்ல! மெரினா கடற்கரையும் அல்ல!
அது 1919 ஏப்ரல் 13.
ஜாலியன் வாலா பாக்.
அன்று பைசாகி தினம்.
சீக்கியச் சகோதரர்களுக்கு ஏப்ரல் 13 பெருமிதத்துக்குரிய நாள். ‘சீக்கிய அறப்படை’யை (கால்ஸா) குரு கோவிந்த் சிங் நிறுவிய நாள்.
அந்தப் புனிததினத்தில் தான் அமிர்தசரஸ் பொற்கோயில் அருகிலுள்ள ஜாலியன் வாலா பாகில் அமைதியாகக் கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்கள்மீது எந்த முன்னறிவிப்புமின்றி மனிதத்தன்மையே இல்லாத மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டது ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹாரி டையர் தலைமையில் வந்த பாதுகாப்புப் படை..
‘சுட்டுத் தள்ளுங்கள்’ என்று டையர் உத்தரவிட்டவுடன் அவனுடன் வந்த பாதுகாப்புப் படையினர் 150 பேரும் (அவர்களில் 50 பேர் இந்தியர்) கண்மூடித்தனமாகச் சுட்டனர். அதிகாரி உத்தரவிட்டால் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காமல் அடிபணிகிற அரசாங்க ரவுடிகள் 10 நிமிடங்களுக்கும் மேல் இடைவிடாது சுட்டனர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 379 என்று பிரிட்டிஷ் அரசாங்கம் பொய் சொன்னது. காந்திஜி தலைமையிலான குழு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது. படுகாயமடைந்தவர்கள் சுமார் 2000 பேர். பெண்களும் குழந்தைகளும் தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அது பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைச் சட்டமான ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்திஜியின் தலைமையில் ஒட்டுமொத்த இந்தியாவும் போராடிக் கொண்டிருந்த காலகட்டம். ஜாலியன் வாலாபாகில் அதற்கான பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதுதான் டையரின் படை உள்ளே நுழைந்தது.
ஜாலியன் வாலா பாகின் நாலாபுறமும் நெடிய மதில் சுவர்கள். சுவரேறித் தப்பியவர்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். பூங்காவின் நடுவில் ஒரு கிணறு. துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிப்பதற்காக அதில் குதித்தவர்கள் பலர். அந்தக் கிணற்றில் மட்டுமே 120 உடல்கள் மிதந்தன.
ரௌலட் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் மக்களிடையே ஏற்பட்ட போராட்ட உணர்வை நசுக்கிவிடுகிற நோக்கத்துடன்தான் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது – என்கிற குற்றச்சாட்டை டையர் மறுக்கவேயில்லை. ஜாலியன் வாலா பாக் படுகொலை தொடர்பான விசாரணையின் போது அவன் கொடுத்த வாக்குமூலம் ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்தது.
”சுட்டேன்…. அங்கே கூடியிருந்த கூட்டம் சிதறி ஓடும்வரை சுட்டேன்…… கூட்டத்தைக் கலைப்பதற்காகச் சுடவில்லை. இன்னொருமுறை போராட்டங்களில் கலந்துகொள்ளவே அஞ்சுகிற குலைநடுக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே சுட்டேன். ஒட்டுமொத்த பஞ்சாபிலும் அப்படியொரு குலைநடுக்கத்தை ஏற்படுத்தவே சுட்டேன்….. கூடுதல் படை இருந்திருந்தால் இன்னும் அதிகம் பேரைச் சுட்டுக் கொன்றிருப்பேன்” – இதுதான் மனிதமிருகம் டையரின் வாக்குமூலம்.
அது இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த நேரம். அப்படியொரு நேரத்தில் அவ்வளவு திமிராக டையர் கொடுத்த வாக்குமூலத்துக்கும் இப்போது இருக்கிற சூழ்நிலையில் சென்னையில் காவல்துறை அதிகாரிகள் கொடுக்கிற வாக்குமூலத்துக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதையும் பார்க்க முடியவில்லை.
ஜாலியன் வாலா பாக் போலவே மெரினாவிலும் அமைதியாகத்தான் திரண்டிருந்தனர் இளைஞர்களும் பெண்களும்! அவர்களைப் போலவே இவர்களும் நிராயுதபாணிகள். அவர்களைப் போலவே இவர்களும் தங்கள் உரிமைகளைக் காக்கத் திரண்டிருந்தனர். அவர்களை எப்படியாவது கலைக்க வேண்டும் என்கிற நோக்கம் டையர்களுக்கு அன்றும் இருந்தது இன்றும் இருந்திருக்கிறது. நமது காவல்துறை அதிகாரிகள் தாமாகவே முன்வந்து கொடுக்கிற வாக்குமூலங்கள் இதை உறுதி செய்கின்றன.
‘ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் இயற்றப்பட்டது குறித்து மயிலாப்பூர் துணை ஆணையர் 6 முறை விளக்கினார்…… அதற்குப் பிறகும் போராட்டம் கைவிடப்படவில்லை….’
‘நாளடைவில் சட்ட விரோத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாணவர்களிடையே நுழைந்துவிட்டனர்’
’23ம் தேதி காலையில் கலைந்து செல்லும்படி காவல்துறை கேட்டுக்கொண்டது. சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் அதை விரும்பவில்லை…..’
‘காலை 10 மணிக்கு போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. ஒரு பெண் காவலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். 23 மோட்டார் சைக்கிள்கள் காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன’
‘நடுக்குப்பத்திலும் தாக்குதல் நடந்தது’
‘அமைதிப் போராட்டம் திசை மாறியதையடுத்து அதைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது’
இதெல்லாம் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல். ஓரளவு நியாயமான அதிகாரி என்று நான் நம்புகிற அதிகாரி ஒருவரும் சேர்ந்தே இதையெல்லாம் தெரிவித்தது வேதனையளித்தது என்றாலும் இதில் எதைப்பற்றியும் நான் கேள்வி எழுப்பப் போவதில்லை.
காவல்துறையும் சில ஊடகங்களும் தெரிவிக்கிற இரண்டு குற்றச்சாட்டுகள் குறித்து மட்டும் நான் பேச வேண்டியிருக்கிறது.
1. போராட்டத்தில் பங்கேற்ற சிலர் குடியரசு தின விழாவைச் சீர்குலைக்க முயன்றனர் – என்கிற குற்றச்சாட்டு.
2. போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் அதில் பங்கேற்கும்படி நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவ மக்களைத் தூண்டினர்…. அதற்காக 500 ரூபாய் பணமும் பிரியாணி பொட்டலமும் வழங்கினர் – என்கிற குற்றச்சாட்டு.
அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்த ஓர் அறப்போரைக் கொச்சைப்படுத்துவதற்காகவே செய்யப்படும் இந்த இழிவான பிரச்சாரத்தை அதில் பங்கெடுக்காத என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் அதில் பங்கெடுத்த லட்சோபலட்சம் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் இது எவ்வளவு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும்?
இந்த அவதூறுகளை மேலும் அருவருப்பாக்கும் விதத்தில் இருந்தது குடியரசு தின விழாவில் குழப்பத்தை ஏற்படுத்த கடற்கரையில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கிறதா – என்று போலீசார் சோதனை போட்டது. தங்களது தகிடுதத்தத்தை நியாயப்படுத்த காவல்துறை என்னென்ன கூத்தெல்லாம் நடத்த வேண்டியிருக்கிறது பாருங்கள்!
’23ம் தேதி வரை பொறுத்துக் கொண்டிருந்த காவல்துறை குடியரசு தின விழா நெருங்கிவிட்ட நிலையில்தான் வேறு வழியின்றி நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும்’ என்பது ஊடக நண்பர் ஒருவரின் கருத்து. மாணவர் போராட்டம் தொடர்ந்ததால் குடியரசு தின விழா அணிவகுப்புக்கான இரண்டு ஒத்திகைகள் ரத்து செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டினார் அவர்.
குடியரசு தின அணிவகுப்பை நடத்துவதற்காகத்தான் அமைதியாகப் போராடிக்கொண்டிருந்த இளைஞர் திரளை காவல்துறை வலுக்கட்டாயமாகக் கலைக்கப் பார்த்தது – என்பது ‘குடியரசு தின விழாவைச் சீர்குலைக்க சதி நடந்தது’ என்கிற குற்றச்சாட்டுக்கு முரணானது.
ஒவ்வோராண்டும் சென்னைக் கடற்கரையில் நடக்கிற குடியரசு தினவிழா அணிவகுப்பை நேரிலோ தொலைக்காட்சியிலோ பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எந்த ஆண்டு அணிவகுப்பு மிகவும் கம்பீரமாகவும் அழகாகவும் இருந்தது என்பதைத் தீர்மானிக்க நமது நினைவுகளை ரீவைன்ட் செய்து பார்த்தால் போதும். அப்படியே அது எதுவென்று தீர்மானித்தாலும் அந்த ஆகச் சிறந்த அணிவகுப்பைக் காட்டிலும் அழகானதாக இருந்தது ஜனவரி 17 முதல் 23 வரை அந்தக் கடற்கரையைக் கறுப்பு உடைகளால் அலங்கரித்த எங்கள் இளைஞர்களின் அணிவகுப்பு. வலுக்கட்டாயமாக அதைக் கலைக்கக் காவல்துறைக்கு உத்தரவிட்டது யார்?
நடப்பது மக்களாட்சி…. அதாவது குடியரசு. மக்கள் சக்தியைப் பெருமைப்படுத்த வேண்டிய நாள்தான் ‘குடியரசு நாள்’. இதை உணராமல் மக்கள் சக்தியை அடக்கி ஒடுக்கி அவர்களை சமூக விரோதிகள் என்றும் விஷமிகள் என்றும் சிறுமைப்படுத்த முயலும் ஓர் அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் குடியரசு நாளைக் கொண்டாட என்ன தகுதி இருக்கிறதா – என்கிற கேள்விக்கு எந்த அதிகாரியாவது பதில் சொல்ல முடியுமா?
சென்னைக் கடற்கரையில் கூடிய லட்சக்கணக்கான இளைஞர்களால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கங்கள் இழைத்த தொடர் துரோகங்கள் அம்பலமாவதையும் அந்தப் போராட்டம் தொடர்வதையும் மத்திய அரசு விரும்பவில்லை என்பது நண்பர்கள் சிலரின் வாதம். மத்திய அரசு கொடுத்த நெருக்கடியில்தான் ஓ.பி.எஸ். அரசு அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – என்கிறார்கள் அவர்கள்.
தமிழக முதல்வர் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். மோடியுடன் நல்லுறவைப் பேணுவது முக்கியம்தான்…. அதைவிட முக்கியமானது மக்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்வது!
மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் பிழையானதாக இருந்தால் அதை ஏற்க மறுக்கிற துணிவு ஒரு மாநில முதல்வருக்கு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். 2009ல் சொக்கத்தங்கம் சோனியாவின் பழிவாங்கும் மனப்போக்கைத் தட்டிக்கேட்கக் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு அஞ்சியதால்தான் 26வது மைலில் ஒன்றரை லட்சம் உறவுகளை இழந்திருக்கிறோம். இதை பன்னீர் செல்வம் மறந்துவிடக் கூடாது. ஒருபோதும் கலைஞர் பன்னீரின் வழிகாட்டி ஆகிவிடக்கூடாது.
குடியரசுதின விழாவைச் சீர்குலைக்க போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முயன்றார்கள் என்கிற குற்றச்சாட்டு வலிந்து கூறப்படுகிற ஒன்றாகவே தெரிகிறது. ஒருவேளை ஏதாவது ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் அந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தால் அப்படியொரு ஐயம் எழுவதற்கு எது அடிப்படை என்பதையாவது முதல்வர் விவரிக்க வேண்டும்.
போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவ மக்களுக்கு 500 ரூபாய் பணமும் பிரியாணி பொட்டலமும் வழங்கினர் – என்கிற குற்றச்சாட்டு அபத்தத்திலும் அபத்தம். மெரினா போராட்டத்தை நடத்தியது 500 ரூபாயும் பிரியாணியும் கொடுத்து ஆள் பிடிக்கிற அரசியல் கட்சிகள் இல்லை. அப்படியே பணம் கொடுத்திருந்தாலும் பிரியாணி கொடுத்திருந்தாலும் உழைத்துப் பிழைக்கிற எங்கள் மீனவச் சொந்தங்கள் அதை வாங்கியிருப்பார்களா? ஆபத்துக்காலத்தில் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவினார்கள் என்பதற்காக மீனவ உறவுகளை இப்படியா கொச்சைப்படுத்துவது?
தமிழ் நாளேடு ஒன்றில் வெளியாகியிருந்த அற்புதமான பதிவு ஒன்றை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
”ஜல்லிக்கட்டு அல்ல…. மாடு வளர்ப்பதுகூட மீனவ மக்களுக்கு அவசியமற்றது. புற்களற்ற கடற்கரையில் மாடு வளர்ப்பது சாத்தியப்படாது……
ஆனாலும் மாணவர்களை விட்டுவிட்டு எல்லோரும் ஓடியபோது தன்னை நம்பி தங்களுக்குச் சொந்தமான இடத்தில் போராடிய மாணவர்களைப் பாதுகாப்பது தனது கடமை என்று மாவீரர்களாக வந்து மாணவர்களுக்கு அரணாக நின்ற எம் மீனவ உறவுகளை மண்டியிட்டு வணங்குகிறேன்….
உழைக்கும் மக்கள் எப்போதுமே மகத்தானவர்கள்…. அவர்கள்தான் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்….’
என்பது மதிமாறன் என்கிற நண்பரின் துல்லியமான கருத்துப் பதிவு.
மதிமாறன் சொன்னது தான் உண்மை.
போராடியவர்களை விரட்ட போலீசார் முயன்றபோது உடுக்கை இழந்தவன் கைபோல உதவிக்கு வந்தார்கள் மீனவச் சகோதரர்களும் சகோதரிகளும்! அதனாலேயே 500 ரூபாய் பிரியாணி என்று அவர்களைக் கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றன சில ஊடகங்கள்.
இதே ஊடகங்கள் தங்கள் வாழ்வுரிமையைக் காக்க களத்தில் இறங்கிய இடிந்தகரை பகுதி மீனவ உறவுகளை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தப் பார்த்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இடிந்தகரை மக்களுக்குப் பாடம் கற்பிக்கப்பார்த்த அவர்களது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தப்பார்த்த ஊடகங்களும் காவல்துறையும் அங்கே செய்ததைத்தான் மெரினாவிலும் செய்திருக்கிறார்கள்.
இடிந்தகரையிலும் மெரினாவிலும் மக்கள் எழுச்சியை அடக்க அவர்களுக்குப் ‘பாடம்’ கற்பித்திருப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் களத்தில் இறங்க வேண்டும் என்கிற உறுதியை அவர்களுக்குள் விதைத்திருப்பது உங்களது அதிகாரத் திமிரும் அறியாமையும் தான்! அந்த இரண்டையும் தவிடுபொடியாக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவாவது எமது மக்கள் மீண்டும் திரள்வார்கள். ஜாலியன் வாலா பாக் சம்பவத்தால் விடுதலைப் போராட்டம் வீழ்ந்துவிட்டதா என்ன?