சேறு பூசும் நடவடிக்கையில் ஜே.வி.பி. : ஆதாரமிருந்தால் வழக்குத் தொடருங்கள்!

154 0

நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இடைக்கால அரசாங்கத்தை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமையின் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மீது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அரசியல் சேரு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

எனவே எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரம் இருப்பின் உடனடியாக வழக்கு தொடருமாறு சவால் விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜே.வி.பி. உறுப்பினர் வசந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (4) கொழும்பிலுள்ள சு.க. தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்

மத்திய வங்கி பிணை முறி மோசடியூடாக கொள்ளையடிக்கப்பட்ட பணம் எனக்கும் எனது பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் வழங்கப்பட்டதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்,

காரணம் இந்த மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தமை , அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுத்தமை என இதற்காக நான் பாடுபட்டிருக்கின்றேன்.

எவ்வாறிருப்பினும் அவ்வாறு எந்த மோசடிகள் இடம்பெறவில்லை என்றும் , அதனை தான் பொறுப்பேற்பதாகவும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னிடம் கூறினார். இதன் போது எமக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்குமிடையிலான முரண்பாடுகள் ஆரம்பித்தன.

எனினும் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கு நான் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியிருக்கின்றேன்.

எவ்வாறிருப்பினும் 2019 ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவ்விடயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதில் ஆர்வம் செலுத்தவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது எமக்கு தெரியாது

ஜே.வி.பி.யின் இந்த நடவடிக்கை தொடர்பில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் வசந்த சமரசிங்க கூறிய விடயத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். இன்று (நேற்று) பாராளுமன்றத்தில் எனது அருகிலேயே அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் போது இவ்விடயம் தொடர்பில் நான் அவரிடம் கேட்ட போது , ‘வசந்த சமரசிங்க இது தொடர்பில் கூறும் வரை நானும் அதனை அறிந்திருக்கவில்லை. ஊடகவியலாளர் மாநாடு நிறைவடைந்தவுடன் இது தொடர்பில் கேட்ட போது , தன்னிடம் அதற்கான ஆவணங்கள் இருப்பதாகக் கூறினார். ‘ என்றார்.

எனவே வசந்த சமரசிங்கவிடம் என்மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக் கூடிய ஆவணங்கள் இருப்பினும் அவற்றை சி.ஐ.டி.யிடமோ, பொலிஸ்மா அதிபரிடமோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்திடமோ கையளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இது என்மீது அரசியல் சேரு பூசும் செயற்பாடாகும். நாட்டின் நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு அனைத்து கட்சிகளையும் இணைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுவார்த்தைகளில் சு.க. ஈடுபட்டு வருகிறது.

இதனை நாம் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை. மக்களை நெருக்கடிகளிலிருந்து பாதுகாப்பதற்கே முயற்சிக்கின்றோம். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை.

இறுதி வரை சாதகமான பதில் கிடைக்கவில்லை எனில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்றதாகும். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளில் எந்தவொரு பக்கமும் நீக்கப்படவில்லை. அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.