தமிழ் தேசிய கூட்டமைப்பு முட்டாள்தனமாக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது!

345 0

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிராக வடக்கு, கிழக்கு தமிழ் இளைஞர்களை வீதிக்கு இறங்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டாள் தனமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – அரசடிபிள்ளையார் ஆலய வீதியில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில்  நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் கொள்கை என்ன என்று தெரியாத வகையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் போன்றவர்கள் செயற்பட்டு வருவதாகவும் இதன்போது குற்றஞ்சாட்டினார்.

கிழக்கிலிருக்கும் சில அரச கைக்கூலிகள் தங்களின் முகவர்களை வைத்துக் கொண்டு முகநூல்கள் ஊடாக ஊடகவியலாளர்களின் குடும்பங்களையும் தனிப்பட்ட முறையில் தாக்குவது அநாகரிகமான செயற்பாடு.

இவ்வாறானவர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கெதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த மே தினம் அன்று மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு நடைபெற்றது. இந்த நிலையில் மே தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறித்தும் அதன் தலைவர், செயலாளர் குறித்தும் பல தவறான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

இன்று இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என மக்கள் வீதியிலிறங்கி போராடிவரும் சந்தர்ப்பத்தில் அந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தினை நாங்கள் முன்னுதாரணமாகக் காட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வடக்கு, கிழக்கு மக்கள் சார்பாக, இந்த அரசாங்கம் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்ற ரீதியில் நாங்கள் கையொப்பத்தினை இட்டுள்ளோம்.

இந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் இளைஞர்களை இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடுமாறு அழைப்பு விடுக்கின்றனர்.

குறிப்பாகச் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் கூட்டங்களில் இந்த வேண்டுகோளை விடுக்கின்றனர். தங்களால் முன்னெடுக்க வேண்டிய முதல்கட்ட வேலையினை செய்யாமல் இளைஞர்களை வீதிக்கு இறக்கிப் போராடத் தூண்டுவது எவ்வளவு முட்டாள்தனமான செயற்பாடு என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

அவர்களது எஜமானர்களுக்கு விசுவாசமாகச் செயற்படுகின்றீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இடாமல் இழுத்தடிக்கு செய்து இளைஞர்களை வீதிக்குப் போராட அழைப்பது தெரிகின்றது.

இரா.சாணக்கியனை பொறுத்த வரையில் அவருக்கு அவரது கட்சியின் கொள்கை தெரியாது. அவரிடம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் என்னவென்று கேட்டால் அவரிடம் தெளிவான பதில் இருக்காது. அவரது அரசியல் செயல்பாடுகள் அவ்வாறான நிலையிலேயே உள்ளது.

எமது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கையானது தமிழ் மக்களின் கொள்ளை. அவர் ஒரு ஊடகத்தில் எமது கொள்கையினை உதாசீனம் செய்திருந்தார். இரு தேசங்கள் ஒரு நாடு என்பது எல்லாம் சாத்தியமா என்று கேட்டிருந்தார்.

அவருக்குத் தெரியாது அவரது கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா மருதானையில் நடைபெற்ற கூட்டமொன்றில் தமிழ் மக்களை எவ்வாறு பாதுகாக்கலாம், அரசியலமைப்பில் என்ன மாற்றம் கொண்டு வரப்படுவதன் மூலம் தமிழ் மக்களைப் பாதுகாக்கலாம் என்பதை அவர் தெளிவாகக் கூறியிருந்தார்.

இலங்கை தீவானது இரண்டு தேசங்களைக்கொண்டதாகக் கருதப்படவேண்டும் அதில் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதைத் தந்தை செல்வா மிக தெளிவாகக் கூறியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முதலில் அவரது கட்சியின் கொள்கை மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தெளிவாகக் கற்றுக்கொள்ளவேண்டும்.

அதன் பின்னர் நேர்மையான அரசியலை முன்னெடுக்கும் எங்கள் மீது கைநீட்டமுடியும். மூன்று மொழியும் தெரியுமென்ற அகம்பாவத்துடன் மற்றவர்களை நகைப்புக்குட்படுத்தாமல் நேர்மையாகச் செயற்பட முயற்சி செய்யுங்கள். அதனைவிடுத்து உங்களது அரசியல் எதிர்காலத்திற்குக் குழிதோண்டவேண்டாம்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.