10, 11,, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குளறுபடி இல்லாமல் பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாடு மற்றும் புதுவையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஓராண்டு இடைவெளிக்குப்பிறகு நாளை, (5ந் தேதி) வியாழக்கிழமையும், பத்தாம் வகுப்புப்பொதுத்தேர்வுகள் ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு நாளை மறுநாள் (6ந் தேதி) வெள்ளிக்கிழமையும் தொடங்குகின்றன. இரு வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
10, 11, 12 ஆகிய பொதுத்தேர்வுகளை 3 வார இடைவெளியில் நடத்த வேண்டியிருப்பதால், நடப்பு ஆண்டிலும் ஒரு பாடத்தேர்வுக்கும், இன்னொரு பாடத்தேர்வுக்கும் இடையில் போதிய இடைவெளி விடப்படவில்லை. ஆனாலும் கூட பாடத்திட்டம் குறைக்கப்பட்டிருப்பதாலும், இரு முறை திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டிருப்பதாலும் பொதுத்தேர்வுகளை எழுத மாணவ, மாணவியர் பதற்றமின்றி, மனதளவில் தயாராகியிருப்பார்கள். இனி வரும் நாட்களில் அனைத்துப் பாடங்களையும் பற்றி கவலைப்படாமல், அடுத்து வரும் தேர்வில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் அதிக மதிப்பெண் பெறலாம்.
பொதுத்தேர்வுகள் குளறுபடியின்றி நடைபெறுவதை அரசு தேர்வுகள் துறை உறுதி செய்ய வேண்டும். நடப்பாண்டில் 12ம் வகுப்புக்கு நடத்தப்பட்ட இரு திருப்புதல் தேர்வுகளிலும் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாயின. அதேபோன்று பொதுத்தேர்வுகளிலும் நடக்காமல் இருப்பதை தேர்வுகள் துறை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், நீக்கப்பட்ட பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். மொத்தத்தில் பொதுத்தேர்வுகள் செம்மையாக நடத்தப்படுவதற்கும், அதில் மாணவ, மாணவியர் சாதிப்பதற்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.