அனல்மின் நிலையத்தில் இன்று அதிகாலை நிலவரப்படி 32 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலக்கரி வரும்வரை ஒரு யூனிட்டை மட்டும் இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்உற்பத்தி யூனிட்டுகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. 5 யூனிட்டுகளை இயக்க வேண்டுமானால் தினமும் 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும்.
இந்நிலையில் அனல்மின் நிலையத்தில் இன்று அதிகாலை நிலவரப்படி 32 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலக்கரி வரும்வரை ஒரு யூனிட்டை மட்டும் இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று அதிகாலை 1வது யூனிட் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற 4 யூனிட்டுகள் செயல்படாததால் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துவரும் நிலையில் இன்று முதல் கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் பெரும்பாலான பகுதியில் காலை முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போது 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு இன்று மாலை நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. அதன்பின் மீண்டும் மற்ற 4 யூனிட்டுகளிலும் மின்உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.