எங்களது வரலாறுகள் வித்தியாசமானவை, அதனை பேசுவதற்குரிய காலம் இன்னும் இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – விசுவமடு மத்தியில் அமைந்துள்ள சனசமூக நிலைய வளாகத்தில் நீண்ட காலம் வசித்து வந்த வயோதிப தம்பதியினருக்கு வோல் தம் ஸ்ரோ லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணனால் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய மக்கள் இன்றும் வீடுகள் இன்றி அல்லல்படுகின்றார்கள். குறிப்பாக நீண்ட எதிர்பார்ப்புகளோடும், கனவுகளோடும் வாழ்பவர்களுக்கு அவர்களுடைய இறுதிக்காலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு வீடு லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் தாபதர் கோபாலகிருஷ்ணனால் வழங்கப்பட இருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு, மலையகம் என்று அவருடைய பணிகள் மிகப்பெரிய பணியாக இருக்கின்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலேயே பழமையான கட்டடம் ஒன்று இன்று வரையும் இருக்கின்றது.
ஆயிரம் ஆயிரம் மனிதர்களையும், வரலாறுகளையும் கொண்ட இந்த சனசமூக நிலைய வளாகம் புனிதத்திற்குரிய இடமாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
அக்கட்டடத்திற்கு விவேகானந்தர் வந்து பேசினார், நாவலர் வந்து சென்றவர், மகாத்மா காந்தி வந்து பேசினார். அதன் அடையாளமாக அந்தக் கட்டடம் இன்றும் இருக்கின்றது. இதிலும் பெரும்பெரும் மகான்களும், தலைவர்களும் தடம் பதித்த இடம். பழைய வரலாறுகள் வித்தியாசமானது.
அதனை பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. எங்களை நாங்களே ஆளுகின்ற ஆட்சி வரட்டும் அதன் பின்னர் எங்கள் அடையாளங்களைப் பலப்படுத்தலாம்.