இலங்கைக்கு இதுவரை இந்தியா 23,000 கோடி கடனுதவி!

294 0
இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை இலங்கைக்கு இந்தியா 3 பில்லியன் டொலா்கள் (சுமாா் ரூ.23,000 கோடி) கடனுதவி அளித்துள்ளது.
இதுதொடா்பாக இலங்கைத் தலைநகா் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்ளும் வகையில், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்க இலங்கைக்கு 1 பில்லியன் டொலா் வரை கடனுதவி (லைன் ஆஃப் கிரெடிட்) அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தக் கடனை தேவைப்படும்போது இலங்கை பெற்றுக் கொள்ளும் வகையில், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது.
கூடுதலாக அரிசி, மருந்துகள், தொழில்துறை மூலப்பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களும் இந்திய கடனுதவியின் கீழ் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் போன்ற பெட்ரோலியம் பொருள்களை வாங்க தனியாக 500 மில்லியன் டொலா் கடனுதவி அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இது வெவ்வேறு வகையான எரிபொருள் அடங்கிய 9 சரக்குத் தொகுப்புகளை இலங்கைக்கு விநியோகிக்க வழிவகை செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து இதுவரை சுமாா் 4 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் எரிபொருள் விரைவில் இலங்கை வந்து சேரவுள்ளது. கடந்த மே 2 ஆம் திகதி எரிபொருளுக்கு கூடுதலாக 200 மில்லியன் டொலா் கடனுதவி அளிக்க இந்தியா முன்வந்தது. இதுதவிர, எரிபொருள் கொள்முதலுக்கு 500 பில்லியன் டொலரை குறுகிய கால கடனாக இலங்கைக்கு இந்தியா அளித்துள்ளது.
இலங்கைக்கு சுமாா் 16,000 மெட்ரிக் டன் அரிசியை இந்தியா வழங்கியுள்ளது. சிங்கள, தமிழ் புத்தாண்டின்போது நல்லெண்ண அடிப்படையில் கூடுதலாக 11,000 மெட்ரிக் டன் அரிசி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை இலங்கைக்கு இந்தியா 3 பில்லியன் டொலா்கள் (சுமாா் ரூ.23,000 கோடி) கடனுதவி அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.