கொழும்பு – காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் சிலர் செவ்வாய்கிழமை (3) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளனர்.
கடந்த 25 நாட்களாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் குறித்த தரப்பினர் தமது கோரிக்கைகள் தொடர்பில் இதன் போது மகாநாயக்க தேரர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அத்தோடு ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக மகா சங்க பிரகடணத்தை அறிவிக்குமாறும் அவர்கள் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவப் பட்டங்களைத் திரும்பப் பெறுமாறும் பிரதம பீடாதிபதிகளிடம் இக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அதே போன்று ராஜபக்ச குடும்பம் நடத்தும் அல்லது அவர்களுடன் தொடர்புடைய எந்த மத நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் பிரதம பீடாதிபதிகள் இதன் போது கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
காலி முகத்திடலில் மாத்திரமின்றி நாடளாவிய ரீதியிலும் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் , இதுவரையிலும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு வழங்கப்படாமலுள்ளது. நெருக்கடிக்கான தீர்வுகளைக் காண்பதற்கு மகா சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு பொறுப்பற்றவர்கள் பதிலளிக்காமையால் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தன்னை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.