இந்திய காவல்துறையின் அறிவியல் மாநாடு மத்திய பிரதேசம் தலைநகர் போபாலில் அண்மையில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களின் காவல் அதிகாரிகள் பங்கேற்ற இம்மாநாட்டில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல்உட்கோட்ட டிஎஸ்பி பிரியதர்ஷினி,குற்றவாளிகளின் கருவிழி அசைவைக் கணக்கிட்டு, உண்மையை கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
‘ஒருவன் வாயால் மறைக்கின்ற உண்மைகளை, அவன் கண்கள் காட்டி கொடுத்து விடும்’ என்று கிராமங்களில் சொல்வது உண்டு. தொன்று தொட்டு வரும் அந்த உளவியலின் சாரத்தை ஒட்டியே, கண்களின் கருவிழிகளின் அசைவுகளைக் கொண்டு ஒரு வழக்கின் குற்றவாளி யார் என்பதை கண்டறியலாம் என்கிறார் டிஎஸ்பி பிரியதர்ஷினி.
டிஎஸ்பி பிரியதர்ஷினியிடம் இந்த ஆய்வறிக்கை பற்றி கேட்டதற்கு, “உண்மையை மறைக்கும்ஒரு குற்றவாளியின் செயல்பாட்டை, அவரது விழிகளின் இயக்கத்தை தொழில்நுட்பங்களைக் கொண்டு ஆராய்வதன் மூலம் எளிதில் கண்டறிய முடியும். இதனால் தடய அறிவியல் துறையில் விசாரணை மற்றும் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை பெரிதும் குறைக்கலாம்” என்கிறார்.
மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21, குற்றம்சாற்றப்பட்டவர்களுக்கு வழங்கிஉள்ள அடிப்படை உரிமை, விசாரணைக்கான உரிமை மற்றும் மனிதஉரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்தின் 10-வது பிரிவுமற்றும் சிவில் – அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் பிரிவு 14 போன்றவை இந்த கருவிழி சோதனையின் வழியாக பெறப்படும் காலதாமதமற்ற நீதியின் வழியாக பாதுகாக்கப்படும் என்றும் அந்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலை பூர்வீகமாக கொண்ட பிரியதர்ஷினியின் தாத்தா செம்புகுட்டி 1949 தமிழக காவல்துறையில் உதவிக் காவல் ஆய்வாளராக பணியில் சேர்ந்து தென்மாவட்டங்களில் பணியாற்றி, 1987-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். இவரது தந்தை ஆறுமுகசாமி அதே வருடத்தில் உதவிக் காவல் ஆய்வாளராக பணியில் சேர்ந்து, தற்போது மதுரை போக்குவரத்து துணை ஆணையராக உள்ளார்.
தனது குடும்பத்தின் 3-ம் தலைமுறையாக காவல்துறைப் பணியில் சேர்ந்துள்ள பிரியதர்ஷினி, அகில இந்திய அளவிலான காவல்துறை மாநாட்டில் இந்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகளின் ‘பயோ மெட்ரிக்’ எனப்படும் உருவ அடையாளங்கள் தகவல் சேகரிப்பு குறித்த மசோதா கடந்த மாதம் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், தமிழக டிஎஸ்பி தாக்கல் செய்துள்ள இந்த ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.