சென்னை விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா தொற்றுக்கு பிறகு சென்னையில் விமான சேவை சகஜ நிலைக்கு கொண்டு வர எடுத்த நடவடிக்கையால், உள்நாட்டு முனையத்தில் 95 சதவீதமும், பன்னாட்டு முனையத்தில் 60 சதவீதமும் பயணிகளின் வருகை உயர்ந்து உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடியவர்களுக்காக, மல்டிலேவல் கார் பார்க்கிங் கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 2,200 கார்கள் நிறுத்த முடியும்.
கார் பார்க்கிங் பணிகள் ஜூன் மாதம் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் உணவு, சினிமா திரையரங்கம் அடங்கிய வணிக வளாகமும் அமைக்கப்பட உள்ளது.
விமான சேவைகள் அதிகரிப்பதால், நவீன வசதிகள் மேம்படுத்த வேண்டியதாக உள்ளது. பாதுகாப்பு சோதனை, உடமைகள் சோதனை பகுதிகளில் பயணிகளுக்கு ஏற்படும் கால நேரம் தாமதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் விமான பயண நேரம், போர்டிங் வசதி உள்பட பயணிகளின் வசதிக்காக, புதிய செயலி விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.