ஜனாதிபதி, தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு

253 0

குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் 06ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என பல அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தமது சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று (03) பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

உத்தேசித்துள்ள வேலைநிறுத்தம், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அல்ல என்றும், பல அரசியல் கட்சிகளின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தவும், மக்களை ஒடுக்குவதும் இந்த வேலைநிறுத்தத்தின் நோக்கமாகும். அதனால் நிலைமையை சரியாகப் புரிந்து கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வது சகல ஊழியர்களினதும் கடமை மற்றும் பொறுப்பு என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய வழிமுறைகளைக் கையாண்டு, அரசியல் பிளவுகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். வேலை நிறுத்தங்களால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவதே இதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கம் ஆகும். இதை உணர்ந்து, நிறுவனங்கள் வீழ்ச்சியடைய இடமளிக்கக்கூடாது.

கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற வேலைநிறுத்தத்தை பொருட்படுத்தாமல் தமது கடமைகளை ஆற்றிய தொழிலாளர்களுக்குத் தமது நன்றியை தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய நிலைமையை புரிந்துகொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அனைத்து தொழிற்சங்கங்களையும் கேட்டுக்கொண்டார்.