நினைவுகள் மீட்டப்படுகின்றது!-அகரப்பாவலன்.

277 0

நினைவுகள் மீட்டப்படுகின்றது – அதில்
முள்ளிவாய்க்காலின் காட்சிகள்
விரிகின்றது ..

இதயத் துடிப்பின் சத்தம்
குருதிப் பாய்ச்சலை
வேகப்படுத்திய நேரம் ..

தூரத்தில் இடிமுழக்கம் – அது
மேகங்கள் மோதியல்ல
கிபீர் அரக்கன் முழங்கிய
எகத்தாளச் சத்தம் ..

உலகநாடுகள் அள்ளிக்கொட்டிய
ஆயுதக் குவியல்கள் ..
நாடு அழிந்தாலென்ன !
மக்கள் அழிந்தாலென்ன !
பணப்பேரமே முக்கியம் ..
சிங்கள அரசியல் போட்டி
தமிழரை அழித்து
சிங்களவரை மயக்கிய நேரம் ..
அட ! எல்லாமே ..
வோட்டுக்கும்
பதவிக்கும்
பணத்துக்கும்
குடும்ப வளர்ச்சிக்குமே ..

அந்த ஏமாற்று வித்தையை
சிங்களர் இன்னும்
புரிந்தபாடில்லை ..

அவர்கள்தானே இனவெறி
தூபத்துக்கு சாமியாடும்
பக்தர்கள் ..

பசி ..பட்டினி ..
நோய் .. மருந்தின்மை ..
ஒவ்வொரு வினாடியும்
யார் உயிர் போகும் !
ஒவ்வொரு கணமும்
மரண பயம் தலை விரித்தாடிய நேரம் ..
அட ! ஆயுதம் வேண்டிய பணத்திற்கு
கணக்கு காட்ட
இன அழிப்பு தேவைப்பட்ட நேரம் ..
இனத்துவேசம்தான்
சிங்கள அரசியலை  தீர்மானிக்கும்
அச்சாணி ..

மனிதக் கொலைகள்
அவ்வளவு துகளா ?
மனிதம் மறப்பதுதான்
புத்தரின் போதனையா ?

புத்தருக்கு பிரித்தோதி
நூல்கட்டுவது ..
தமிழரை அழிப்பதற்கா ?
நீங்கள் புத்தரையல்லவா
அவமதிக்கின்றிர்கள் ..

மறக்குமா நெஞ்சம்
சிங்களவர் ஆடிய
கொலைவெறித் தாண்டவத்தை ..

ஆழ்மனதின் பதிவுகள்
மே  18
நோக்கி
பயணிக்கிறது ..

நினைவுகள்
மீட்டப்படும் ..
காட்சிகள் பதியப்படும்
காலத்தின் கண்கள்
திறக்கப்படும் ..
-அகரப்பாவலன்-