போலி விசா மூலம் இத்தாலிக்கு செல்ல முற்பட்ட 5 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

265 0

போலி விசாக்களை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட 5 இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் தனது 14 மற்றும் 18 வயதுடைய மகள்களுடன் கத்தாரின் தோஹா ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக நேற்று இரவு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

எவ்வாறாயினும், அவர்களின் விசா ஆவணங்கள் தொடர்பான சந்தேகம் காரணமாக, அவர் தனது மகளுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்.

இந்நிலையில், 35 வயதான தாயாரின் விசா ஆவணங்கள் மீதான சந்தேகம் காரணமாக, குறித்த பெண் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்லவிருந்த புத்தளத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும் விசா ஆவணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாக விசாரணைக்குட்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழுவினர் இதற்கு முன்னரும் இத்தாலிக்குச் சென்றுள்ளதாகவும், மன்னாரில் உள்ள ஒருவரின் உதவியைப் பயன்படுத்தி போலி விசா ஆவணங்களைப் பெற்று இம்முறை பயணம் செய்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.