தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அதிகார மோகத்தின் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அறிந்திருந்தவர்கள், எம்மிடம் அவற்றைக் கூறாமல் மறைத்தனர். அப்பாவி மக்களை பலி கொடுத்து, அரசியல்வாதிகள் தம்மை பாதுகாத்துக் கொண்டனர். இவ்வாறானதொரு நாடு எமக்கு தேவையா? இல்லை. தற்போதுள்ள முறைமை நிச்சயம் மாற்றமடைய வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இத்தாலியின் பாதுவா நகரில் அமைந்துள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது இதனைத் தெரிவித்த பேராயர் மேலும் குறிப்பிடுகையில் ,
கடந்த மார்ச் மாதம் புனித பாப்பரசர் அவரது கைகளால் எழுதி எனக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.
தாக்குதல்கள் குறித்து முன்னரே அறிந்தவர்கள் எம்மிடம் அதனைக் கூறவில்லை. கூறியிருப்பார்களாயின் அப்பாவி மக்களை நாம் பாதுகாத்திருப்போம். அதிகார மோகத்தினால் தாக்குல்கள் குறித்த தகவல்களை மறைத்தனர்
முன்னாள் ஜனாதிபதி முதற்கொண்டு சகல உயர் அதிகாரிகளும் , பாதுகாப்பு பிரிவிலுள்ள அதிகாரிகளும் தமது பொறுப்புக்களிலிருந்து விலகினர். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே அதனைச் செய்தனர்
எவ்வாறிருப்பினும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான இந்த போராட்டத்தில் மக்கள் வெற்றி பெருவர் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
யாருடைய அதிகாரத்திற்கும் கீழ்படிபவர்கள் நாம் அல்ல என்பதை காண்பிப்பதற்காகவே ஆயர்கள் அனைவரும் இங்கு (இத்தாலிக்கு) வருகை தந்திருக்கின்றோம். ‘உங்களுடன் நான் இருக்கின்றேன்’ என்று புனித பாப்பரசர் எமக்கு உறுதியளித்திருக்கிறார். தாக்குதல்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தாக்குதல்கள் தொடர்பில் அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். நாம் மாத்திரமே அறியாமலிருந்தோம். தேர்தலில் வெற்றி பெருவது மாத்திரமே அவர்களது எண்ணமாக இருந்தது
நாட்டை பாதுகாப்போம் – நீதியை பெற்றுக் கொடுப்போம் என்று கூற வேண்டிய தேவை அவர்களுக்கு காணப்பட்டது. அதன் காரணமாகவே இவ்வாறு செய்தனர். அவ்வாறில்லை எனில், ‘இவ்வாறு ஒரு தாக்குதல் இடம்பெறவுள்ளது. எனவே பாதுகாப்பாக இருங்கள்’ என்று எமக்கு அறிவுறுத்தியிருப்பார்கள் அல்லவா?
அதிகாரிகள் அவர்களுக்குள் கடிதங்களைப் பகிர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொண்டனர். அப்பாவி மக்களை பலி கொடுத்து , அரசியல்வாதிகள் தம்மை பாதுகாத்துக் கொண்டனர்.
சுதந்திரத்தின் பின்னரான 75 ஆண்டுகளாக சகல அரசியல்வாதிகளும் எமது அழகிய தீவை சீரழித்துள்ளனர். இவ்வாறான நிலைமைக்கு அனைத்து கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும். 1980 இல் உருவாக்கிய அரசியலமைப்பின் ஊடாக சர்வாதிகாரத்தை நாட்டில் தோற்றுவித்தனர்.
இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. நாடு சீரழிக்கப்பட்டது. ஊழல் மோசடிகள் தலை தூக்கின. சட்டம் சீர் குழைக்கப்பட்டது. இந்த முறைமையை வீசி எறிவதற்கு பொறுத்தமான தருணம் இது. இந்த முறைமைமை நிச்சயம் மாற்றம் பெற வேண்டும்.
புதிய சுதந்திரம் எமது நாட்டுக்கு அவசியமாகும். நீதியானதும் , நியாயமானதும் , சகோதரத்துவத்துடனானதுமான சமூகம் எமக்கு தேவை. இவ்வாறானதொரு நாடு எமக்கு தேவையா? இல்லை. மாற்றமடைய வேண்டும் என்றார்.