புரட்சிக்கு தமிழர்களும் உறுதுணையாக நில்லுங்கள்: சுமந்திரன்

172 0

இன்றைய  கொடுங்கோல் ஆட்சியை நீக்க வேண்டும் என்ற மக்கள் புரட்சிக்கு உறுதுணையாக செயற்பட வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு. நாம் ஒடுக்கப்பட்ட போது பெரும்பான்மையினத்தவர் எமக்காக  வரவில்லை என்பதற்காக கொடுங்கோலாட்சியாளர்களை விரட்டியடிக்கும் இன்றைய போராட்டத்தில் நாம் ஒதுங்கி நிற்பது முட்டாள்தனமான செயற்பாடு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

எமது போராட்டத்தை நேரடியாக ஆயுதம் கொடுத்து முறியடித்த இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் இப்போதும் எம்மால் பேசமுடியும் என்றால்  இந்த நாட்டிலே  நிலைத்து நிற்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வு வருவதற்கு அத்தியாவசியமாக உள்ள பெரும்பான்மை சமூகத்துடன் பேசுவதும் அவசியம் என்றார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (2) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இந்த ஆட்சி முடிவுறவேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்களை பொறுத்தவரையில் எவருமே ஆட்சிபீடம் ஏறக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். 2005 ஆம் ஆண்டு வாக்களிப்பில் தமிழ் மக்கள் கலந்துகொள்ளவில்லை, எனினும் ஏனைய சகல சந்தர்ப்பங்களிலும் ராஜபக் ஷர்களுக்கு எதிராகவே தமிழ் மக்கள் வாக்களித்தனர். எனவே நாட்டில்  மாற்றங்களுடன் நாம் இணைந்து செயற்பட வேண்டும். அட்டூழியம் ஒன்று இடம்பெறுகின்ற போதும், ஒடுக்குமுறை ஒன்று இடம்பெறுகின்ற போதும் நடுநிலை வகிப்பதோ அல்லது ஒதுங்கி நிற்பது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல. ஆகவே இன்று இந்த கொடுங்கோல் ஆட்சியை நீக்க வேண்டும் என்ற மக்கள் புரட்சி உருவாகியுள்ளது. அந்த முயற்சிக்கு உறுதுணையாக செயற்பட வேண்டிய பாரிய தார்மீக பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு என்றார்.