பிரதி சபாநாயகரின் இராஜினாமா கடிதம் தொடர்பாக ஜனாதிபதி இதுவரை எந்த அறிவிப்பையும் விடுக்காததால் பாராளுமன்றத்தில் வெற்றிடமாகி இருக்கும் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகராக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ரன்ஜித் சியம்பலாபிடிய ஏப்ரல் 30 ஆம் திகதியில் இருந்து தனது பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்ததுடன் அதுதொடர்பான ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
அரசியலமைப்பின் பிரகாரம் சபாநாயகர் அல்லது பிரதி சபாநாயகர் பதவி விலகினால், அதுதொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவிக்க வேண்டும்.
ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டு, பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.
ஆனால் ரன்ஜித் சியம்பலாபிடியவின் ராஜினாமா கடிதம் தொடர்பாக ஜனாதிபதி இதுவரை சபாநாயகருக்கு அறிவிக்கவில்லை என சபாநாயகர் அலுவலக பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதியின் அறிவிப்பு இல்லாமல் வெற்றிடமாகி இருக்கும் பிரதி சபாநாயகர் ஒருவரை நியமித்துக்கொள்ள சட்டத்தின் பிரகாரம் முடியாது.
அத்துடன் 4 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றம் கூட இருப்பதுடன் அன்றைய தினம் தனது ராஜினாமா தொடர்பாக ரன்ஜித் சியம்பலாபிடிய விசேட உரை ஒன்றை ஆற்ற இருக்கின்றார்
அவரின் உரையை அடுத்து, பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்துகொள்ள வேண்டும் என சபை ஏகமனதாக தீர்மானித்தால், அதற்கான அனுமதியை சபாநாயகர் சபைக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
இதேவேளை, பாராளுமன்றம் நாளை கூடியதுடன் பிரதி சபாநாயகர் பதவிக்கு எமது அணியில் இருந்து ஒருவரின் பெயரை பிரேரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (1) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மேதின கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பெயரை பிரதி சபாநாயகர் பதவிக்கு பிரேரிக்க இருப்பதாகவும் அதேநேரம் ஆளுங்கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் பெயரை பிரேரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.