அ.தி.மு.க. திட்டங்களை முடக்குவதில் தி.மு.க. சாதனை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

299 0

கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க.வினர் நிறைவேற்ற முடியாத திட்டங்களை திமுக ஒரே ஆண்டில் நிறைவேற்றியதாக முக ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தியாகதுருகம் சாலையில் உள்ள அம்மா திடலில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். கழக அமைப்புச் செயலாளர் மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பின செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான பிரபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகுவேல் பாபு, மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பி னருமான குமரகுரு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது,
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 12 மாதங்கள்தான் ஆகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க.வினர் நிறைவேற்ற முடியாத திட்டங்களை திமுக ஒரே ஆண்டில் நிறைவேற்றியதாக பச்சை பொய் பேசுகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் தான் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மின்வெட்டால் விவசாயிகள், நெசவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மின்வெட்டு ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாக்கி புதிய மாவட்ட கட்டிடம் கட்ட ரூ.104 கோடி நிதி ஒதுக்கீடு செய்தோம். தொடர்ந்து ஒரே ஆண்டில் புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடம் கட்ட ரூ. 385 கோடி ஒதுக்கீடு செய்தோம். தற்போது இந்த மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இதேபோல் தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை கொண்டு வந்தோம். மேலும் ஏழை குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்தோம். இதனால் ஆண்டுக்கு 540 மாணவர்கள் மருத்துவம் பயில்கின்றனர்.
தி.மு.க. வினர் நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும், இளைஞர்கள் கல்வி கடன் ரத்து, முதியோர் ஓய்வூதியம் உயர்த்தப்படும், சிலிண்டர் மானியம் வழங்கப்படும், 100 நாள் வேலை 150 நாள் ஆக உயர்த்தப்படும், அத்தியாவசிய பொருட்கள் விலை கட்டுப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. மாறாக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த திட்டங்களான வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் பெறுவதற்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட ங்களை மூடுவதில் தி.மு.க. சாதனை படைத்துள்ளது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. இதில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற பாடுபட வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து ஏழை எளிய மக்களைக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, செண்பகவேல், நகர செயலாளர் ஷியாம் சுந்தர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தங்க பாண்டி யன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செய லாளர் ஜான் பாஷா, பாசறை தலைவர் பரியாஸ், திருநாவலூர் ஒன்றிய கழக அவைத் தலைவர் முத்துராமன் ,ஒன்றிய துணைச் செயலாளர்கள் பழனி மலை,, லதா பாலாஜி, ஒன்றிய இணைச் செயலாளர் சரண்யா சிவகுமார் ,ஒன்றிய பொருளாளர் மனோகரன் மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார், கொளஞ்சி, சாந்தி ஐயப்பன் திருவெண்ணை நல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவருமான இளந்துறை ராமலிங்கம் ஒன்றிய அவைத் தலைவர் தேவநாதன் ஒன்றிய இணைச் செயலாளர் பழனியம்மாள் ஒன்றிய துணைச் செயலாளர்கள் அனிதா, ரகோத்தமன், ஒன்றிய பொருளாளர் பழனி மாவட்ட பிரதிநிதிகள் மலர்விழி, கோதண்டபாணி, கார்த்திகேயன், ,திருவெண்ணை நல்லூர் நகர கழக செயலாளர் காண்டீபன், மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தலவாடி பாக்கியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.