ஊடகங்களின் தவறா? இல்லை எம்
உறவுகளின் தவறா?
ஈழத் தமிர்ர்களின் இழப்பு மிகுந்த
கனத்த நாட்களின் காலப் பதிவுகளை
இந்நாட்களில் எங்கும் காணோமே!!!
என்தான் நடந்தது எமக்கு இன்று?
உக்ரைன் அழிவின் உச்சப் பதிவுகளை
போட அனுமதிக்கும் பேஸ்புக்கும் யூடீப்பும்
ஈழத் தமிழர்களின் இழப்பின் பதிவுகளை
ஏன்தான் தடுக்கின்றன என்றேனும் புரிகிறதா?
போரின் பங்காளிகள் யாரென்று புரிகிறது
ஊரின் வாய் மூடியதும் யாரென்று புரிகிறது
நீதிக்குத் தீர்வது இல்லையே இங்கு என்று
நீயும் நானும் நிரந்தர அமைதியாய் ஆவதா…
போர் தந்த காயங்களை மருந்துகள் ஆற்றலாம்
காயத்தின் தழும்புகளை காலங்கள் மாற்றுமா?
நீதியின் கதவுகளைத் தேதிகள் மூடலாம்
வீதியின் கதவுகளுக்கு வாயில்கள் பொருந்துமா?
காலம் ஒரு கணக்கினை வைத்திருக்கிறது
எந்த மாயைகளுக்கும் அது மண்டியிடாது
பாலம் கூடப் பணிந்து வந்து
பாதை திறந்து பயணம் அனுப்பும்
யாரும் அதற்குத் தடைபோட முடியாது.
காயங்கள் புதிதாய்க் கண் திறக்கும்
ஆறவில்லை இன்னும் நான் என்று
ஆவென்று அது தன் வாய் திறக்கும்
வா நீயுமென்று அது வரவழைக்கும்
ஆற்றுவதற்கு அல்ல அடைவதற்கு என்று!
எதையென்று யோசிக்கின்றாயா?
விதையானவர்களை நீ நினைக்கிறாயா?
அதையும் தாண்டி உன்னை அது
வலை வீசிப் பிடிக்கவில்லை.
அலைமோதிய கரையில் அலைமோதிய உறவுகளை
நினைவிற்கொள்ள நினைக்கிறது அந்த
நினைவிழக்கா நாட்கள் நிகழ்த்திய
கனவுகளும் ஏற்க மறுக்கும் காலப் பதிவுகளை.
ஊடகத்திற்கு நீ அடிபையா? ~ இல்லை
உன் உணர்வுகளுக்கு நீ அடிபையா?
பதில் சொல் தமிழா பதில் சொல்…
– வன்னியூர்க் குருஸ்-