எல்லோரும் சேர்ந்தே அழித்தீர்கள்-அகரப்பாவலன்.

269 0

மே பதினெட்டை நோக்கி
மனம் செல்கிறது !
இனவெறியின் அனல்காற்று
நமது நினைவுகளில்
நெருப்பை அள்ளி வீசுகிறது !

கந்தகக் காட்டில்
செந்தணல் தீயில்
தமிழரின் உயிர்கள்
இனவெறியின் ஓமகுண்டத்தில்
ஆகுதியாகியதை கண்டோம் !

இன்று உலகெங்கும்
போர்வெறியின் அனல் வீசுகிறது !
மூன்றாம் உலகப்போர்
மூளும் அபாயம் ! – ஏன்

சிங்கள மக்களை மகிழ்விக்க
இனவெறியாடிய ராஜபக்ஷாக்களை
விரட்டியடிக்க சாத்வீகப் போராம் ..

வினை விதைத்ததின்
வினை அறுப்போ ?
தெய்வம் நின்று கொல்லும்
ஆரம்பமோ ?
இது உலகிற்கும் பொருந்தும் ..
தமிழரை எல்லோரும்
சேர்ந்துதானே அழித்தீர்கள் !

நச்சுக் குண்டுகள் !
பல்குழல் பீரங்கிகள் !
கிபீர் விமானங்கள் !
அதிர்வுக் குண்டுகள் !

துடித்தனர் ! சிதறினர் !
எரிந்தனர் ! பொசுங்கினர் !
கேக் வெட்டியல்லவா
கொண்டாடினீர்கள் !
இன்று ..
பட்டினிக்காக வீதிக்கு வந்து
போராடுகின்றீர்கள்  – அன்று
தமிழர்களின் உயிர்களுக்காய்
போராடியிருந்தால் ..
இலங்கை .. சொர்க்கபுரியாக
அல்லவா மாறியிருக்கும் ..

இனவெறி நீறுபூத்த நெருப்பே – அது
மீண்டும் எரியும் ..
ஏனெனில் அது ..
சுயநலத்தில் விதைக்கப்பட்டது ..

மரித்தவர் கனவை நோக்கிச் செல்வோம்
அறிவுத்தீயில் விடியலை ஏற்றுவோம் .

அகரப்பாவலன்