இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை லிபியாவிற்கு இணையான ஒன்றாக மாற்ற பிருசிலர் முயற்சித்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் பேசிய அவர், எந்த ஒரு ஆட்சி முறைமையும் இல்லாத நாடாக இலங்கை மாறுவதற்கு மக்கள் இடமளித்தால் ஒரு வரலாற்றுப் பிரச்சினை உருவாகும் என கூறியுள்ளார்.
மேலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு மக்கள் விடுத்த அழைப்பு, ஆட்சிக் கட்டமைப்பில் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்றும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே இந்த தீர்க்கமான நேரத்தில் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தை மறந்து விடாமல் மக்கள் அனைவரும் விவேகத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை சில குழுக்களும் குண்டர்களும் இலங்கையில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை இல்லாமல் செய்து நெருக்கடியை ஏற்படுத்தும் முயற்சிகளை மேகொண்டு வருகின்றனர் என்றும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.