தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

135 0

காவல்துறை சோதனை நடந்த காலத்தில் கூட கஞ்சா, குட்கா விற்பனை தொடர்ந்தது. சோதனையை காரணம் காட்டி விலை தான் அதிகரிக்கப்பட்டிருந்தது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக, காவல்துறையினர் நடத்திய 2ம் கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனையில் 2,423 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6,319 குட்கா வணிகர்கள் கைது செய்யப்பட்டு 44.90 டன் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறை களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல.

கடந்த டிசம்பர் 6ந் தேதி முதல் ஜனவரி 6ந் தேதி வரை காவல்துறை இதே போன்று முதற்கட்ட சோதனையை நடத்தியது. அந்த சோதனையில் கஞ்சா, குட்காவுடன் 8,929 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் 3 மாதங்கள் கழித்து இப்போது நடத்தப்பட்ட காவல்துறை சோதனையில் ஒட்டுமொத்தமாக 8,742 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனை முடிவடைந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையிலும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலானவர்கள் கைது செய்யப்பட்டு, அதே அளவிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றால், முதற்கட்ட சோதனையால் எந்த பயனும் இல்லை என்று தானே பொருள்? இப்போது கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் முதற்கட்ட சோதனையிலும் கைது செய்யப்பட்டவர்களாகவே இருக்கக்கூடும்.

காவல்துறை சோதனை நடந்த காலத்தில் கூட கஞ்சா, குட்கா விற்பனை தொடர்ந்தது. சோதனையை காரணம் காட்டி விலை தான் அதிகரிக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் நினைத்தால் அதிகபட்சமாக மூன்றே நாட்களில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

ஆனால், இது சாத்தியமாகாததற்கு கஞ்சா வணிகத்திற்கு காவல்துறையில் உள்ள சிலர் ஆதரவளிப்பது தான் காரணம் ஆகும். அண்மையில் நாகப்பட்டினத்தில் கஞ்சா கடத்தல் கும்பலுடன் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் பிரியாணி விருந்து சாப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காவல்துறையில் உள்ள கஞ்சா வணிகர்களுக்கு ஆதரவான கருப்பாடுகள் களையெடுக்கப்பட வேண்டும். கஞ்சா, குட்கா போன்றவை எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறது என்பதை கண்டறிந்து, மூலத்திலேயே அவற்றை அழிக்க வேண்டும். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் வணிகத்தைத் தடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். போதைப் பொருள் வணிகர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது, திடீர் சோதனைகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும். அதன் மூலம் கஞ்சா, குட்கா, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.